Friday, May 13, 2016

*தொழிலாளர் தின வாழ்த்துகள்*



*தொழிலாளர் தின வாழ்த்துகள்*

எழுந்து நிற்கும் கட்டங்களாகட்டும்
விரிந்து நீளும் சாலைகளாகட்டும்
கறைபடியா கரங்களில் ...
உழைப்பில் மட்டுமே உதிரம் கலந்தோம் ..
அது எப்படி
எங்களை உறிஞ்சிய கரங்கள்
கறையானது....

தொழி லாளி என்று நாங்கள்
அழைக்கப்படலாம்
முதலாளித்துவ வர்க்கங்களில்
இன்னும் கூலிகளாகவே இருக்கிறோம்
சீவப்பட்டு வெண்ணீர் வகுத்த
மரங்களுக்காக நாங்கள்
செந்நீர் இழந்திருக்கிறோம்..
அறுந்து விழும் செம்பனைக் குலைகளில்
எங்கள் குலைகள் வேகின்றன..

ஊருக்கான உலைகளில் வேவதை
பார்க்கும் இடைவெளி தருணங்களில்
எங்கள் உலைகளையும்
கொஞ்சம் எட்டிப் பாருங்கள்..
வெந்து கொண்டிருப்பது
வயிறாகவும் இருக்கலாம் ..

எது எப்படியோ..
மறவாமல் சொல்லி விடுங்கள்
வாழ்த்துகளை...
மீண்டும. கேட்பதற்கு ...

ஆண்டொன்று காத்திருக்க வேண்டும்!

*முனியாண்டி ராஜ்.*
See more

வண்ண ஓவியமெல்லாம் நீ


வண்ணங்கள் விரித்த பாதைதனில்
விழிகள் வெளிறிய நீலங்களைத்
தேடியபடி..
தனிமையின் பயணத்தில்
உன்னிடம் கழண்ட இதயங்களைக்...
கணக்கில் கொள்ளாதே
விழிகளில் நுழைந்த வண்ணங்களை
இதயம் கொண்டு போ..
ஓவியமாக உருவாகி உன்னைத்தேடி தொடரலாம்
நான் ....

*முனியாண்டி ராஜ்.*

ஒரு சுவாசத்தின் தொடக்கம்

என் மரணத்தின்
பயணத்தில்..
நீ உதிக்கும் சில கண்ணீர்த் துளிகளில்
என்னைப் பற்றிய நினைவுகளை
அப்போதே...
நீ கழுவிக் கொள்ளலாம்..

என் இதயத்தால் எழுதிய
கவிதைகளை
விரல்வழி வழுக்கல் என்று
நீ
ஒதுக்கித் தள்ளலாம்...
மறுபிறவி நம்பிக்கை
உனக்கு இல்லையாதலால்
மீண்டும் பிறப்பேன்
என்ற வார்த்தைகளை
மறந்து களிக்கலாம்..
பரவாயில்லை...
உன் இதயத்தின் மூலையில்
எங்கேயாவது தேடிப்பார்.....
என் சுவாசத்தின் எச்சம்
ஏதேனும் மீந்திருக்கலாம்..
- முனியாண்டி ராஜ்.

வாக்குறுதியில் மறைந்திருக்கும் நஞ்சுகள்

என்னருமைத் தோழா..
சில வாக்குறுதிகளில்
வேரில்லாமல் இருக்கலாம்..
வேரில்லாமல் மரம் ஏது என்று
கேள்வி கேட்காதே......
நீரில்லாமலேயே செடி முளைக்கலாம்!

உனக்குக் கைநீட்டும் கைகளில்
அதன்
அழுக்கு ஒட்டாமல் பார்த்துக்கொள்..
தேவதையை விட பேயா
பேயை விட தேவதையா என்று
உன்னை நீயே கேட்டுக் கொள் ..
விமர்சனங்களில் விளம்பரங்களில்
இதயம் தொலைத்து விடாதே ..
செவியில் விழும் வார்த்தைகளைச்
சவரம் செய்து பார்..
கடல்களை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்
விழுந்து தொலைந்து விடாதே ..
உன் பாதங்களையும் பாதைகளையும்
நீ முடிவு செய்து கொள்..
கேள் .. கேள் .. கேள் ..
பதில்களுக்குள் காணாமல் போகாதே ..
மூளைச் சலவை
உனக்குப் புதியதாக இருக்கலாம்..
புரட்டியும் போடலாம்!
உனது பொழுதுகளை
உன் விரல்களிலேயே வைத்துக்கொள்..
அடுத்தவன் ஏறும் படகாக
உன் முதுகை வளைக்காதே !

உனக்கான அந்தப் பொழுதுகள்


அதிகாலை தேவதைகள் அணைக்க
வரும் தருணம்..
அலறம் ஒரு தடவை அலறி
அமைதிக்குள் அடங்கும்....
நுனிக்கால்கள் போர்வைக்குள்...
மெல்ல பதுங்கும் கணங்களில்
எழ வைக்க விரும்பாமல்
என்னை உனக்குள்ளே வைத்திருக்க
முயல்கிறாய் ..

இரவின் இம்சை இனிப்புகள்
இன்னும் ஆங்காங்கே விரலோரம்
அமர்ந்திருக்கின்றன..
என்னை இழுத்துச் சேர்த்த படி
இன்னொரு கவிதையைக் கேட்கிறாய்..
கவிதைகள் வார்த்தைகளால் மட்டுமே
கூறமுடியுமென்ற வட்டத்தை எனக்கு
உடைத்துக் காட்டியவள் நீ..

என் கனவுச் சுவர்களில்
உன்னைவிட இவ்வளவு அழகாக யாரும்
வண்ணமிட இயலாது..
இரவு கலந்த மெல்லிய வெளிச்சத்தில்
வண்ண பிம்பத்தில்
நீ அழகாகவே சிரித்துக் கொண்டிருக்கிறாய்
ஆண்டுகள் பல கிழிக்கப்படா
நாள்காட்டி அருகில் !

காலை இருட்டை விரட்டியெழும்
என்னால்..
நீ விட்டுச் சென்ற கருக்கலிலிருந்து
இன்னும் வெளிவர முடியாமலேயே...

இன்றும் !!!

*முனியாண்டி ராஜ்.*
See more

திடம்


அச்சாணியைத் தளர்த்தி விட்டு
செடிமறைவில் காத்திருக்கிறீர்கள்
நான் குடை சாய்வேன் என்று!
பாய்ந்துவிழும் கதிர்களில்
ஒன்றிரண்டை பாறை இடுக்கில்...
செருகிவிட்டு
சூரியனையே சிரிக்கிறீர்கள்..

என் வளர்ச்சியின் வேகத்தில்
நீங்கள் தடம் புரள்வதை நிறுத்துங்கள்
உங்கள் வீழ்ச்சியில்
நான் மகிழ்வடையப் போவதில்லை..
சண்டையிடும் தருணங்களைக் கடந்து
வருடம் பல ஆகிறது ...
உங்களின் பல ஆமைகளில்
நான் முயலாகவே மாறி விட்டிருக்கிறேன்

என்னை வீழ்த்த வாள்களை
வீசும் போதெல்லாம்
நான் செதுக்கப்பட்டே வருகிறேன்
வார்த்தைகளை வீசும்போதும்
என்னை வளர்த்துக் கொண்டே இருக்கிறேன்
உங்கள் காழ்ப்புணர்ச்சிகளில்
நீங்கள் தேய்வதை
நானும் கண்டு வியக்கிறேன்..

உங்கள் பாதைகளை விட்டு
விலகிச் செல்வதை
தூரத்தில் நின்றே ரசியுங்கள்...
நன்றி என்ற வார்த்தையாவது..

மிஞ்சும்!!

*முனியாண்டி ராஜ்.*

நினைவுகள்

சொட்டுச் சொட்டாய்
விழுந்து
வெள்ளமாய் பரவுகின்றாய்
என் இரவெங்கும்!
திடீரென விழித்தால்.....
ரோஜாவின் மேல்
பனியாய் நீ!

அம்மா

    💐🌾🍁அம்மா💐💐🍁🌷
    எந்தக் கல்லூரியிலும்
    பட்டமளிப்பு செய்யப்படுவதில்லை..
    எந்தப் பள்ளியிலும்...
    பாடத்திட்டமாய் இல்லை
    எந்தக் கருத்தரங்குகளிலும்
    கழுத்தறுக்கப்படுவதுமில்லை ...
    எப்படியம்மா கற்றாய்
    அன்பின் அத்தனை பாடங்களையும்!!

    வாழ்க்கை முதல் அடியின்
    அறிமுகம் நீ..
    இறுதி நழுவலின்
    நம்பிக்கை நீ ...
    உறவுகளின் உயிரெழுத்தாய்
    அகரத்தின் சிகரமாய்
    அறிவின் முதல் ஊட்டலாய்..
    பேச்சின் முதல் வார்த்தையாய்
    அன்பின் தலை அரவணைப்பாய்
    எப்படி வந்தது அனைத்தும் !
    தலைசாயும் நேரம் மடியாய்
    தன்னம்பிக்கை தளரும் நேரம்
    மூன்றாம் கையாய்..
    கண்ணீர் அணைக்கும்
    பதினோராவது விரலாய்...
    எரியும் தீயிலும்
    தணிக்கும் நீராய் ......
    ஒவ்வொரு நொடியிலும்
    நீயாகவே தெரிகிறாய் ....
    வாழும் தெய்வமாக!!
    *முனியாண்டி ராஜ்.*

நாகரீக விலகல்கள்



தடம் விட்டு விலகும்
பார்வைகள்
தரம் மீறி.....
நழுவிய ஆடைக்குள்
விரசமாய் நுழையும் போது ...
நாகரீகமாய் காப்பாற்ற வேண்டிதான்
இருக்கிறது ...
நட்பையும்!

*முனியாண்டி ராஜ்.*
 

ஏக்கம்


திரும்பத் திரும்ப அதே வளைவில் நின்று கொண்டு
பரிகாசமாய் சிரிக்கிறாய்..
இழந்துவிட்ட ஏதோ ஒன்றை எடுக்கும் முயற்சியில்
தற்செயலாக என்று கூட கூற முடியாத சூழலில்
உன் கண்களில் உரசிச் செல்கிறது...
என் இறந்த காலங்கள்…
மீண்டும் அதே பார்வையில் தான்
நீ நின்று கொண்டிருக்கிறாய்…
வயதின் சீற்றம் உன் பார்வையில்
என்றுமே இருந்ததில்லை ….
என் வயதை மட்டும்தான்
காலம் கொஞ்சம் கிழித்துப் போட்டிருக்கிறது…
வளைவுகளுக்குள் கடந்து போகும் யாருக்குமே
நீ தெரிவதில்லை….
நீ மறைந்தும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருப்பது
என்னுள் மட்டும்தான் என்று அவர்களுக்குத் தெரியும் வரை
அந்த வளைவுகளுக்குள் …….
எனக்கு மட்டும்தான் நீ தெரிவாய்!!!
- முனியாண்டி ராஜ்.
 

நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...