Sunday, April 2, 2017

துளிப்பா 006

அனைவரும் விலகியே செல்ல
இன்னும் கேட்பாரற்றே கிடக்கிறது
தெருவில் கல்
*********************************
உணவுகளைத் தருவித்து விட்டு
மேஜைக்குள் காலியாகியிருந்தது உறவு
கைப்பேசிகளில் மனம்

கவிதைகளை இப்படியும் பார்க்கலாம்

கவிதைகளை இப்படியும் பார்க்கலாம்
===•••===•••===•••===•••===••
கவிதை ஒன்று ஆரவாரமேதுமின்றி
காரின் கண்ணாடி வழியே
மெல்லமாய் இறங்கிக் கொண்டிருந்தது
சிவப்பு ஒளிகளைப் பாய்ச்சிக் கொண்டே
வரிசைப் பிடித்திருந்த வாகனங்களின் பின்
நானும்..
இன்றேனோ இந்த நெரிசல்
மிகவும் பிடித்திருந்தது
முன் கண்ணாடி வழி இறங்கிய
கவிதை வரிகளையோ
பக்கவாட்டுகளில் துளித்துளியாய்
உதிர்ந்த சொற்களையோ
விழிகள் விலக மறுத்து அமர்ந்திருந்தன

தரை விழும் துளிகள் மண்கலந்து
நிறம் மாறி நழுவி போயிருக்கலாம்
வழியில் எங்கேனும் விழுந்து
முடமாயிருக்கலாம்
விதைகள் ஏதேகிலும் பாய்ந்து
விருட்சங்களுக்குள் பதுங்கியிருக்கலாம்
அங்கீகரிக்கப்படாத கவிதைகள் போல்
காலம் அவற்றின் சாரை உறிஞ்சி
வீசியும் போட்டிருக்கலாம்

எப்படியோ..

இக்கணம் வழியும் துளிகளை மட்டும்
படித்துக் கொண்டே வருகிறேன்

#முனியாண்டி_ராஜ்.

துளி

ஒரு மழைக்குளிரின்
சில்லென்ற இரவுப் பயணத்தில்
சட்டென அறுந்து விழுகின்றன
கண்களின் எச்சத் துளிகள்
கரும் உருவங்களாய்
சீறி மறையும் மரங்களிலும் பாறைகளிலும்
கவனம் அவ்வப்போது பாயும்போதும்
முகங்களில் அறையும் எதிர்வரிசைகளில்..
உன் எச்சரிக்கைகளின் எதிரொலிகளில்
விழிகள் விரிந்து கொண்டே
தூக்கத்தைக் கடக்கும் இரவுகள்

#முனியாண்டி_ராஜ்.

ஹைக்கூ004

மழை விட்டும்
தூவானம் மட்டும் தூறியபடியே
சன்னல் சாளரத்தில்
-—-----------------------------------
இரவுக்குள் நுழைந்தும்
நிலா மட்டும் ஒளிந்திருக்கிறது
மேகத்திற்குள்
---------------------------------------
கரையைத் தழுவிய அலைகளில்
கரையாமலேயே இருந்தது
காலடிச் சுவடு
-----------------------------------------
புத்தகப் பையைச் சுமந்தபடியே
மாணவன் கேட்கிறான்
கல்வி அவ்வளவு பாரமா
-----------------------------------------

காலம் தோற்ற நுட்பம்

காலம் தோற்ற நுட்பம்
===••===•••===••=
நான் கூற மறந்தவற்றையும்
எழுதும் போது
வார்த்தை நழுவியவைகளையும்தான்
அவள் எதிரொலியாய் அறைந்து போனாள்
அவசரங்களில் இடைமறித்த
அவள் கனவுகளின் வரிசைகளில்
நான் நிதானமிழந்தவற்றைக் கோடிட்டும்
தவறிப் போன நினைவுத் திகதிகளில்
என்னைத் தாழிட்டும்
சிரிக்க மறந்த துணுக்குகளில் சிறையிட்டும்
என்னைச் சிக்க வைத்த வெற்றியில்
சிறையிட்டும் போனாள்
அமைதியில் ஆழ்ந்திருந்த கைப்பேசிகளில்
அவள் அழைப்புகள் உறங்கிப் போனதில்
அப்படியொரு கோபம் அவளுக்கு..
தவறிய அழைப்புகளில்
வருந்திய பொழுதுகளைப் படிக்கவும்
அவள் தயாரில்லை
சுருங்கிய மொழிகளில் சுணங்கிய என்னையும்
அவள் சுருக்கி விட்டாள்

கைப்பேசிகளும்
காலம் தோற்ற நுட்பங்களும் கடந்து
களம் புகுந்தால்
நிலைக்கும் ஓர் உறவில்
நானும் நீடித்திருக்கலாம்..

#முனியாண்டி_ராஜ்.


ஓர் அழிவின் முடிவு

உள்ளுக்குள் எரிந்து கொண்டிருக்கும்
ஓர் எரிமலை
அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை
மௌனங்களுக்குள் நான் சிறைபட்டிருப்பதாய்
பேசிக் கொண்டார்கள்
எனது ஒவ்வொரு பின்வாங்கலுக்கும்
கோழையெனச் சிட்டை ஒட்டித்
தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்
அவர்களின் அகராதியில்
நீரற்றத் தாவரமாகவே
என்னைப் புரட்டிப் புரட்டிப் படித்தார்கள்
ஈரமான விறகு எப்படி எரியுமென
எகத்தாளமாய் சிரித்தார்கள்
வாளற்ற வீரனை ஈட்டியால் செருகியே
வீரத்தை வார்த்தைகளால் பொறித்தார்கள்
ஆழிப் பேரலைகள் அடங்கியிருப்பது
ஓர் ஆழிக்குள்தான் எனத் தெரியும்போது
அவர்களுக்கான பயணம்
தூரங்கள் பல கடந்திருக்கலாம்

படைப்பு


விரல்களிலிருந்து விரிந்து பறக்கும்
அந்தப் பட்டாம் பூச்சிகளைத்தான்
அவள் கவிதைகளென்கிறாள்
அந்த இளம் சிறகுகளின் படபடப்பில்
அத்துணை ஆர்வம் அவளுக்கு
அவள் இமைகளின் நகல்கள்
அவை என அறியாமல்
விழிகளை நகர்த்தவே மறந்திருப்பாள்
அதெப்படி
உங்கள் விரல்களிலிருந்து மட்டும்
பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன என
வியப்போடு கேட்கிறாள்

போடி பைத்தியக்காரி..
உன் கண்களைக் கண்ணாடியில்
பார்த்ததே இல்லையா என
எப்படிக் கேட்பேன்

#முனியாண்டி_ராஜ்.

இசையற்ற வரிகளாய்...

இசையற்ற வரிகளாய்...
===•••===•••===•••===
ஒரு செந்தூராவின் துணையுடன்
தனியனாய் ஒரு
இரவு நேர தூரப் பயணத்தில்
நாழிகை கடக்கும் பயணங்களில்
திடீரென அலை மாறிய செந்தூரன்

ஜன்னல் விலகிய திரைச்சீலைகளின்
கொடையில்
தூரத்து வெளிச்சத்தின் நிழலில்
மௌனங்கள் கடந்து செல்கிறாய்
கனங்களை என்னுள் இறக்கிவிட்டு

எஞ்சிய காப்பியின் காய்ந்த சாயல்களில்
எதையோ வரைந்து வைத்தது போல்
ஒழுகலும் ஓவியமாய் தெரிய..
நீ
வரைந்திருக்க நியாயமில்லை என
உள்மனதோரம் முனகும் குரல்

ஒவ்வொரு அலையாய் தாவியும்
எதிலும் இருப்புக் கொள்ளாமல்
தூரங்களில் வீசியெறியப்படும் தொலையியக்கியாய்
வண்ணம் தொலைத்த ஓவியம் போல்தான்
மனமும்

கனவை விலக்கி வைத்து விட்டு
கதவைத் திறக்கையில்
விரிந்து கிடக்கும் செவ்வானத்தில்
செந்தூரா மீண்டும் மிதந்து வருகிறது
இசையாய்!

#முனியாண்டி_ராஜ்.

#முதலாளித்துவம்_இங்கே_முகாமிட்டிருக்கிறது

#முதலாளித்துவம்_இங்கே_முகாமிட்டிருக்கிறது
===•••===•••===•••===•••===•••===
கொஞ்சம் வானமும்
மீதமிருந்த உடைந்த நிலாவின்
ஒரு பாகமும் மீதமிருந்ததாய்
சொன்னார்கள்

நிலங்களெல்லாம் கூறுபோட்டு
விற்றுத் தீர்த்த பின்னும்
ஆறுகளுக்கும் ஏரிகளுக்கும்
முள்வேலிகள் அமைத்த பின்னும்
மலைகளுக்கும் மடுக்களுக்கும்
உரிமை மாற்றிய பின்னும்
கடலின் சில பாகங்கள் மட்டும்
விலைக்கு இருப்பதாக
அவர்கள்தான் சொன்னார்கள்

பாதைகளில் வரிகள் கட்டிவிட்டு
கடலுக்குள் இறங்க நினைத்தவர்களுக்கு
அலைகளின் விலைகள்கூட
கொஞ்சம் அநியாயமாய்தான் பட்டது
கரையில் கால்வைத்து
கட்டணம் மறந்தவர்கள் கழுத்துக்கும்
கயிறு தயாராகவே இருந்தது

நசுங்கிக் கடந்த பொதுவுடமையின்
முதுகில்
நாற்காலி போட்டு அமர்ந்திருந்தது
முதலாளித்துவம்....
கண்கள் மறைக்கப்பட்ட மனிதம்
மட்டும்...
தடுமாறி... தடுமாறி...

சே..
எச்சரிக்கைப் பலகையைப்
பார்த்து விட்டாவது உள்நுழைந்திருக்கலாம்!

#முனியாண்டி_ராஜ்.

நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...