Friday, February 10, 2017

புல்லுருவி

நல்மரத்தில் புல்லுருவியாய்
நெறியெனும் நஞ்சேற்றி
நாசம்செய் முற்படுவோர்
நண்பரெனும் போர்வைதனில்
நயவஞ்சகமாய் கலந்துவருவர்
நட்புகளே கவனம்காப்பீர்
உறங்கும் உறைவாளுள்
உன்னுயிர் சிதைக்கவே
உணர்ச்சிமிக ஏத்திடுவர்
உண்மைதனை ஒளித்திடுவர்
உலகமகா சதிவலையில்
உன்னுறவும் சாய்த்திடுவர்
களைப்புமிக நீயடைந்து
கவலைக்கடல் நீயாழ்ந்து
கண்சற்றே மூடுகையில்
கண்ணிமை பிடுங்கியுன்
கனவுப்பயணம் சீரழித்து
கட்சிக்கொடி நக்கிடுவர்

கடலுக்கடியில் ஒரு புயல்



கடலுக்கடியில் ஒரு புயல்
===•••===•••===•••==
சட்டென நிலைகுத்தின அலைகள் 
அரண்களில் திடீரென முளைத்த
அரக்கக் கைகளில் 
அலைகளின் விரல்கள்
வலுக்கட்டாயமாக முறிக்கப்பட்டன
பறப்பதற்குத் தயாராயிருந்த
புறாக்களின் சிறகுகள்
கண்ணுக்குத் தெரியாமலேயே
பிய்த்தெறியப்படத் தொடங்கின

அரண்களுக்குள் விழுந்த ஓட்டைகளில்
விஷங்களுடன் உள்நுழைந்த அரவங்களை
எந்த அலைகளும் கண்டு கொண்டதாகத்
தெரியவில்லை..
கரங்களுக்குள் ஏந்தியிருந்த
வெண்தாள்களின் வயிற்றுப் பகுதியில்
செங்குருதிகள் மைகளாகக் கொட்டுமென
விரிந்திருந்த மணற்பரப்புகளும் எதிர்பார்க்கவில்லைதான்..
ஈரப்பார்வையுடன் ஸ்தம்பித்துப் போயிருந்த
அலைகளுடன்கூட அவற்றுக்கு நேரமில்லை
கைகுலுக்க..

நிலைக்குத்திய அலைகளுக்காகவும்
நிர்மூலமான மணற்பரப்புகளுக்காகவும்
நடுக்கடலில் மையமிடத் தொடங்கியது
கடலுக்கடியில் ஒரு புயல்!!

#முனியாண்டி_ராஜ்.

கொஞ்சம் துளிப்பா

சுவரில் ஓடியது
வாலறுந்த பல்லியொன்று
நம்பிக்கைத் துளிர்ப்புடன்
===========================
அடர்ந்த மழை வெள்ளத்தில்
ஆனந்தத்துடன் சிறுவர்கள் விட்டனர்
காகிதக் கப்பல்
==========================
போக்குவரத்து நெரிசலின்
எஞ்சிய நேரத்தில் கிடைத்தது
வாசிப்பு
==========================

சுயநலங்கள்



சுயநலங்கள்
===•••==••
முதுகெலும்பின்றி ஊறும் 
ஏதோ ஓர் உயிரைப் போல்தான்
நீங்கள் அவனைப் பார்க்கலாம் 
அந்த நான்கு சுவர்களுக்குள்
அவன் வார்த்தைகள் முடமாக்கப்பட்டதாக
புலம்பும் அவன் குரல்களில்
பெண்மையும் ஆண்மையுமற்று
வார்த்தைகள் வெளியேறுவதை
காதுகள்கூட மறுக்கும் சூழலில்
அவனை வெறுக்காதீர்கள்

தெருவெங்கும் தீப்பிடித்த போதும்
வெள்ளச் சூறையாடலில்
ஊர்கள் கலவரம் ஆகும்போதும்
வெறியாடல்களில்
மனிதம் நாராய்க் கிழியும்போதும்
ஒற்றை உயிராய்
உங்களை அவன் தாண்டும் ஓசை
உங்கள் கேட்கும் சக்தியில்
விழுங்கப்படலாம்

போராட்டங்களை அறிவது
அவன் வேலையல்ல என
தவறாக வரைந்து விடாதீர்
மலடாகிப் போன வார்த்தைகளிலும்
மனம் கழண்ட உடலினிலும்
அவன் வழிகளில்
பூக்கள் பூப்பதையே அவன் விரும்பலாம்
குரல்கள் நெறிக்கப்படும் ஓசைகளில்
நீங்கள் எழும் வேளை
அவன் ஓசைகளைத் துறந்து
ஒதுங்கிப் போகவும் செய்யலாம்

புறக்கணித்து விடாதீர்..
அவன் மேனி சிதைக்கப்படும் நேரத்தில்
நீங்கள்
அவனுக்காக குரல் கொடுக்கவும் எழலாம்!

#முனியாண்டி_ராஜ்.

ஓவியம்



ஓவியம் வரையச் சொல்கிறாய்
தூரிகைகளுடன் 
கொஞ்சம் கவிதைகளுடனும்
என் எதிரில் 
நீ 

#முனியாண்டி_ராஜ்.

புரட்சியென்பது புதைக்கப்பட்டதல்ல





புரட்சியென்பது புதைக்கப்பட்டதல்ல
===•••===•••===•••===•••===••
நிறமற்ற வெறித்த பார்வையில்
ஒரு வெற்றிடம் நோக்கும் அதன்
விழிகள் மட்டுமே நீங்கள் அறிந்திருப்பின்
உங்கள் பார்வையின் விலாசம்
குறுகியதென நான் அறிவேன்
இமை விலகா அவ்விழிகளின் பின்
கூர்வாளாய் இறங்கியிருக்கும் வார்த்தைகளின்
குருதிக்கறையை அறிந்திருக்க நேரமின்றி
அவரசக் கையெழுத்துகளில்
உயிர் கரைந்தவர்கள் அவர்கள்

ஒரு சிறுபடை புரட்சியின்
இடை வழி கழன்றவர்களும்
கைத்தட்டல்களின் வெப்பங்களில்
மனம் களித்தவர்களும்
தம்படங்களிலும் சுவரொட்டிகளிலும்
முகம் காட்டி முறைத்தவர்களும் சிரித்தவர்களும்
ஊடக விழிகளுக்கு விருந்து கொடுத்து
இடையில் கழன்று நகர்ந்தவர்களும்
சற்று விலகி நிற்பின்
உயிர்கரைந்த மற்றவர் ரணம் தெரியும்

சித்தாந்தங்களில் உயிர் விதைத்த
அவர்களின் வீரிய விதைகள்
விருட்சங்களின் விலாசங்களின் தேடி
எதிலாவது புறப்பட்டுக் கொண்டிருக்கலாம்
எஞ்சி நிற்கும் ஏடுகளின் முகங்களில்
அந்தச் செவ்வெழுத்துகளை மௌனமாக
படித்துக் கொண்டும் இருக்கலாம்
ஒளித்து வைத்த வரலாறுகளின் ஓலைகளை
உருவியெடுக்கும் முயற்சிகளில் கூடவும்
கூடியிருக்கலாம்..

நானும் அவர்களைப் போல் தான்

வெற்றிடம் நோக்கும் அந்த
நிறமற்ற பார்வைகளை ஒரு புகைப்படமென
ஒதுக்க முடியாமல்
ஊடுருவ முயல்கிறேன்
மறைந்திருக்கும் வாள்கள் தேடி!

#முனியாண்டி_ராஜ்.

இறக்கை முளைக்கும் கணங்கள்



இறக்கை முளைக்கும் கணங்கள்
===•••===•••===•••===•••==
பரந்த ஒரு விண்வெளியில்
எனக்கும்தான் இறக்கையின்றி விரிந்திருந்தது
ஓர் உலகம் 
இறக்கைகைள் முளைத்து ஒவ்வொருவரும்
பறந்து களிக்கும் நேரங்களில்
மேகங்களுக்கு உள்ளே ஓடியோடி
எதையோ தேடிக் கொண்டிருந்தது அது
மேகங்களுக்கு மேலேயும் கீழேயும்
பறந்து கொண்டிருந்தவர்களால்
அதைப் பார்த்திருக்க முடியாதுதான்
மேகங்கள் சிதறியடிக்கும் சில துளிகளில்
குடைகளுக்கு ஒளியும் மனம் அவர்களது
மழையின் மூலத்தை தேடியறிய
இறக்கைகள் தேவையில்லை எனக்கு

எனது அது
மேகங்களை உடைத்து உள்நுழையும்
முயற்சிகள் ஒவ்வொன்றிலும்
ஏதாவது ஒரு துளியைத்
திருடிக் கொண்டு வருவது உண்டு
தனியனாக இறக்கையின்றி திரிவதில்
அப்படி ஒரு சுகம் அதில்..
இறக்கைகள் முறிந்து விழுவோரும்
ரணங்கள் அணிந்து குதிப்போரும்
இறக்கைகளைப் பிய்த்தெறித்து போவோரும்
மரணங்களை நெருங்க நெருங்க
பறக்கும் ஆசை வெறுத்துப் போனது எனக்கு

திடீரென ஒரு விழி விபத்தில்
எனக்கும் இறக்கைகள் முளைக்கும்வரை!

#முனியாண்டி_ராஜ்.

ஒரு முதியோர் இல்லத்திலிருந்து




ஒரு முதியோர் இல்லத்திலிருந்து …….

என் நாள்குறிப்பின்
கடைசிப் பக்கங்கள் எழுதும் சிரமம்
உனக்கு வேண்டாம்…..
அவற்றை நானே எழுதும் ஆற்றல் தீரும்போது
உன்னிலிருந்து வெகுதூரம் சென்றிருப்பேன்
இதுவரை நடந்த வந்த களைப்பில்
கால்கள் அயரும்போது..
சிறகுகள் முளைத்து
எங்கேயாவது பறந்திருப்பேன்….

உன் புறக்கணிப்புகளிலும் சுடுசொற்களிலும்
நான் வெந்து மடிவதைவிட
தனியனாய் பயணம் செய்வது ஏனோ
எனக்குப் பிடித்திருக்கிறது…
என்னை அணைத்துச் செல்ல வேண்டுமென்ற
ஒரு பொய் நாகரீகத்தில் நீயும்
சிக்கிக் கொள்ளாதே..
உனக்குப் பாதையையும் பயணத்தையும் காட்டியது
என் கடமையென நான் நினைக்கவில்லை
வாழ்வின் பூரணம் எனவே உணர்கிறேன்!
அந்த வாய்ப்பு உனக்குக் கிட்டும்போது
நீயும் அதை உணர்வாய்…

பாவங்களில் சிக்குவாய் என்றோ
பலர் வாயில் விழுவாய் என்றோ
பதைபதைத்து என்னை அழைக்க வராதே..
சொல்…அவர்களிடம் சொல்
இப்பாதை என் தேர்வென்று!
என் உரிமைகளைக் கிழித்தெறிய
எத்துணைத் துணிவு கொண்டாயோ
அத்துணிவுடனே சொல்… அஞ்சாதே..
என்னைத் தூக்கியெறிந்த அத்துணிச்சல்
உன் பலமெனக் கொள்!

என்னைப் போல் வாழ்க்கை கிழிந்தவர்
இங்கே ஏராளம்
கிழம் என்று ஒதுக்கப்பட்ட
எங்களுக்குள் ஒத்தடம் கொடுக்க வாய்ப்பளித்த
உனக்கு…
நன்றியைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்!

** முனியாண்டி ராஜ்

கடைசி பக்க முன்னுரை




கடைசி பக்க முன்னுரை
===•••===•••==•••=
எனக்காக எழுதப்பட்ட பக்கங்களை
இறுதிப் பக்கத்திலிருந்து
எட்டிப் பார்க்கிறேன்
விரிசல்களும் கிழிசல்களும் நிறைந்த
ஏடுகளில் ஆங்காங்கே
சிவப்புக் குறியீடுகளில் எதையோ
சொல்ல முயன்று தோற்றிருக்கலாம் நான்

முதல் பக்கங்களில் விரிந்த
கையெழுத்துகளில் தேய்ந்து போன
விலாசங்களைத் தான்
தொடரும் பக்கங்கள் தருகின்றன
இடையிடையே பூத்திருக்கும் பூக்களிலும்
இதமாய் பூசப்பட்ட நஞ்சுகளிலும்
ஆழமாய் இறக்கப்பட்ட நஞ்சுகளிலும்
விழுந்தும் எழுந்தும் வந்திருக்கிறேன்

முகமன் எழுதியவர்களின் பெயர்களைவிட
முகஸ்துதி பாடியவர்களின் பெயர்கள்
ஒவ்வொரு பக்கங்களையும் சுட்டிருக்கிறது
நட்புத் தொடர்ச்சிகளில்
அறுந்து விழுந்தவர்களும்
கழுத்து அறுத்தவர்களும்
தோள் கொடுத்து உயிர் கொடுத்தோரும்
தொடர்ந்தே எழுதப்பட்டு இருக்கிறார்கள்
நிறமறியா சில பசைகளில்
உறவறியா பெயர்கள் கோடிட்டுக்
காட்டப்பட்டிருக்கின்றன சில பக்கங்களில்

நீங்கள் படித்து வெறுத்த பக்கங்களும்
கண்ணீர் தொலைத்த வரிகளும்
எரிச்சல் மிகுந்த எழுத்துகளும்
உறக்கம் கெடுத்த கவிதைகளும்
சில இடங்களில் இருந்திருக்கலாம்
என்னை மீறிய இலக்கணப் பிழைகளும்
உங்கள் கண்களை உறுத்தியிருக்கலாம்
உங்கள் கருத்துகள் எழுத
இடமில்லா பட்சங்களில் !

#முனியாண்டி_ராஜ்.

ஒரே நொடியில்





அழைக்காமலேயே அந்தக் காற்று
ஒரே ஒரு முறை
வாசல் பக்கம் எட்டிப் பார்த்தது
தென்றலா என்று தெரியாது..
ஆனால்
கொஞ்சக் கொஞ்சமாக சேர்த்த
கனவுகளை..
ஒரே நொடியில் சுருட்டிக் கொண்டு போனது!
காற்றுக்கு உருவமில்லை என்று சொல்வதை
நம்ப
கொஞ்சம் சிரமமாயிருக்கிறது..
மனமும் இல்லை என்றாவது சொல்லியிருக்கலாம்!!!!

#முனியாண்டி_ராஜ்.

நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...