Wednesday, September 14, 2016

கடலின் தூரங்களுக்குள்


இன்னும் சில பொழுதுகள்
எஞ்சியிருக்கின்றன....
இரவுகளுக்குள் மெல்ல மெல்ல
தேயும் ..
இந்தப் பகல்களுக்குள் நாம் 
கரைந்து போவதற்குள்!

அவ்வப்போது வந்து
கால்களைச் சீண்டும் அலைகளாகட்டும்
வளைகளுக்குள் இருந்து
எட்டிப் பார்க்கும் நண்டுகளாகட்டும்..
எதையும் சட்டை செய்யாமல்
அதன்போக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறது
நமது பொழுதுகள் ...

உன் மௌனத்தை
உடைத்துப் பார்க்க முடியாமல்
கடலின் தூரங்களுக்குள்
கலைந்து போகின்றன என் விரல்கள்..
வெறிச்சோடிக் கொண்டிருக்கும் மணல்வெளிகளில்
வார்த்தைகளைத் தேடித் தேடித் திரும்புகின்றன..
நம் நான்கு விழிகளும்!

கழிந்து போன
எத்தனையோ ஞாயிறுகளைப் போல தான்
இன்றைய பொழுதும் கழிகிறது..
பரவாயில்லை ....
உன் மௌனம் உடையும்
அந்த ஒரு ஞாயிறுக்காக !!

#முனியாண்டி ராஜ்.


தாங்கிப் பிடிப்பவை

உன் கரங்கள் என்றால்

எத்தனை முறை வேண்டுமானாலும் 


தடுமாறி விழுவேன்....


விழாமலேயே!!!

மழை தீண்டா மின்னல்


வயதறியா ஒரு மழையில்
மரத்தின்கீழ் ஒண்டியவனை
ஒற்றைக் குடைக்குள் நீயழைத்தாய்..

"மரத்தின்கீழ் நிற்காதே.. மின்னல் தாக்குமாம்"
என்றாய் இளஞ்சிரிப்பினூடே..
மனதில் முதல் சிலிர்ப்பினை ஊட்டிய
அந்த உரசலில்
அடுத்தடுத்த மழைகளில்
உன் குடைக்கு ஏங்கிப்போய்
எல்லா மழைகளிலும் நனையத் தொடங்கினேன்
நீ விட்டுச்சென்ற மின்னலைத் தவிர
வேறெதுவும் சீண்டாமல்!!

#முனியாண்டி_ராஜ்.

பொய்க்குரல்கள்

அவனின் ஒற்றைக்குரலில்
உண்மைகள் தரைவிரிப்பின்கீழ்
பதுக்கப்பட்டன...

மூளைச்சலவைகளில் முகமிழந்தவர்கள்
மடிந்து விழுந்தார்கள் ..
சுயநலமிகளின் வெயிலுக்கு
அவன் குடையாகவே மாறிப்போனான்
கண்ணும் காதுமிழந்த ஊடகங்களின்
முப்பொழுது விருந்தில்
அவன் நன்றாகவே உண்டு
வயிறு பெருத்தான்....
வாத்துக்கூட்டங்களின் ஆரவாரத்தில்
அவன் தனக்குத்தானே மகுடம்
சூட்டிக் கொண்டான்..
காட்சிப்பிழைகளில் கண்ணிழந்தவர்கள்
கைகளிணைத்து கவசம் போட்டார்கள்
அவனுக்கு ...
ஒதுங்கி ஒதுங்கி நடந்த உண்மை
உள்ளுக்குள் சொல்லிக் கொண்டது
'தர்மத்தின் வாழ்வுதனைச் சூதுகவ்வும்
தர்மம் மறுபடியும் வெல்லும்'

#முனியாண்டி_ராஜ்.


மழையின் சாரலில்
சரிந்து கொண்டே வருகிறாய் நீ!
நினைவுகளை நிறுத்த முடியாமல்
நீரில் விழுந்த எறும்பாய்
தத்தளிக்கிறது மனது...! 
ஜன்னலுக்கு வெளியிலிருந்து
வீசப்படும் பார்வைகளில்
பனிகளாகவே படர்ந்து வருகிறாய்
நீ...
மழை நின்றும் ...
இன்னுமொரு வெள்ளம்
எனக்குள் கரை புரளலாம்!
வழக்கம் போலவே!!!!

#முனியாண்டி_ராஜ்.

வெறி மிருகமானவன்


நீ குடித்த குருதியின் வீச்சம்
இன்னும் குமட்டிக்கொண்டு இருக்கிறது
உன் கண்களின் இனவெறியமே

உன் முகம் நினைக்கையில்
வந்து போகிறது..
மனித இரத்தம் குடிக்கும் காட்டேரிகளாகவே
நீ நிற்கிறாய்
எங்கள் இனத்தில் நீ செலுத்திய
காமவெறிகள் ...
அடங்கா தீப்பிழம்பாய்
எனக்குள் இன்னும் வழிகிறது
மனிதனொருவன் மிருகமானவன்
என்பதில்
உன் பெயர் மட்டுமே நிற்கிறது
வரலாறுகளில் வீழ்ந்து மக்கிய
சர்வாதிகாரிகள் அனைவரையும்
நீ மிஞ்சியது வரலாறுக்கே அவமானம்
சிறுகூட்டம் ஒடுக்க
பேடிகளின் கூட்டுச்சேர்க்கையில்
நீ சிரித்ததை..
எழுதிக்கொண்டே போகலாம்!
தூரத்தில் நின்று பொருமியவர்கள்
நீ அருகில் வந்தும்
கைகசக்கிக் கொண்டு மட்டுமே
பார்க்கிறோம்...
இயலாமை எண்ணி!!!

#முனியாண்டி_ராஜ்.

#மகளதிகாரம்


மௌனம் தரித்த பொழுதுகளில்
என் மனம் கலைத்தவள் நீ
'அப்பா' என்ற வார்த்தைகளில்
அகராதி மறந்த பொழுதுகளே அதிகம்
பிஞ்சு விரல் இரசித்த விரல்கள்
நீ வளர்த்து பெண்ணாகியும்
அப்படி இருக்கின்றன....
மன இறுக்கங்களாகட்டும்
உழைப்பின் களைப்புகளாகட்டும்
உன் ஒற்றைப் புன்னகையில்
இடம்கழுவிப் போயிருக்கின்றன..
இது வேணும்பா என்ற வார்த்தைகளை
வெறும் பணங்காட்டி
உன்னை ஏமாற்ற விரும்பியதில்லை
உன் தாயிடம் காட்டும் கோபம்கூட
உன்னிடம் முடியாமல் பணிந்திருக்கின்றன
பல்கலைக்கழக வாசலில்
விரல்பிடித்து பயமாயிருக்கு வாங்கப்பா
என்ற வார்த்தைகளில்
மீண்டும் நான்
பாலர்ப்பள்ளியில் போய் விழுந்தேன்..
மணப்பெண் கோலத்தில்
மறுவீடு நீ சென்ற போது....
உன்னோடு நானும் வந்தேன் மனதோடு!!

#முனியாண்டி_ராஜ்.

சிவப்பைக் கிலாகித்தவன்..


மோதல்கள்விடுத்து அமைதியாகி
அவன் அமர்ந்தபோதுதான்
அவன் பொறுமை உரசப்பட்டது
வார்த்தைகளைக் கூராக்கி
ஒவ்வொன்றாய் அவன் இதயத்துள்
இறக்கிப் பார்த்தார்கள் ...
ஹிட்லரையும் முசோலியைப் பற்றியுமே
படித்தவன்
காந்தியை விரட்டிப் பிடிக்கலானான்
அவசரங்களிலும் ஆத்திரங்களிலும்
ஆழம் பார்த்தவன்..
தியானங்களில் பொறுமை தேடி
அமரலானான்...
உதிரம் பார்த்துப் பார்த்துச்
சிவப்பைக் கிலாகித்தவன்..
வெண்மையணிந்து வெளியேற எழுந்தபோது
வேட்டைநாய்களாய் துரத்தத் தொடங்கினர்
பொறுமை என்பது புதிய ஆடைதான்
கழட்டி வீசி
மீண்டும் வன்மை அணியுங்கால்
அவனை தீவிரவாதியென்றே
முத்திரை குத்திக் கொள்ளுங்கள்..
திரும்பும்வழி மூடிவிட்டு!

#முனியாண்டி_ராஜ்.

காதலெனப்படுவது இதுவெனில்....


விழித்தெழும் வேளையில்
இரவுகனாக்களின் சில எச்சங்கள்..
சாலை நிறுத்தங்களில்
வண்ணம் மாறும் சமிக்ஞைகளின்
இடைவெளிகளில்
கடந்துசெல்லும் சுடிதார்களிளெல்லாம்
உன் முகம்..
எழுதுகோல் விரல்களில் வழிகையில்
உன் பெயரின் நர்த்தனம்
கவிதை என்ற பெயர்களில்..
மாலைத் தேநீருடன்
உன் ஒற்றைவிழிப் பார்வை பிம்பம்..
மௌன மழைகளில்
லேசான சாரலின் நனைதல்..
கனத்த மாரிகளின் மிரட்டல்களில்
குடை பிழைத்த
உடலுரசும் அந்த வெப்பங்கள்..
சினிமா கதாநாயகிகளில்
அவ்வப்போது மாறும் உன்முகம்..
ஏதோ ஒரு நினைவில்
திடீரென சுவர்மோதும் போது
'என்னடா கனவா' என்ற சொற்களில்
இடறிவிடும் உன் பாங்கு....
உறங்கும்முன்
ஏதோ ஒரு சினிமா பாடலில் நீ...
ம்ம்ம் ....
இவையனைத்தும்தான் காதலென்றால்
நீயும்
அப்படியே இருந்துவிட்டுப் போய்விடு
என்னைக் கொல்வதைத் தவிர!

#முனியாண்டி_ராஜ்.

உன்னையும் அதனையும் தேடி!


பழைய டைரிகளின் மடிப்புகளில்
தேடித் தேடிப் பார்க்கிறேன்…
நிறம் மாறிய தாள்கள் உடைந்து
முகத்தில் புழுதியைத் துப்பிவிட்டுப் போகின்றன..
தூசுகளின் பரண்களில் 
கண்கள் அலசி ஆழ்ந்து தேடுகின்றன…
இன்னும் கிடைக்காமலேயே நழுவிக் கொண்டு செல்கிறது…
காணாமல் போன வருடங்களைப் போலவே
தொலைந்து போயிருக்குமோ..
தேடிக் கொண்டே செல்கிறேன்
நடந்த வழித் தடமெங்கும்….
உன்னையும் அதனையும் தேடி!
கொடுக்கப்டாமல் போன ஒரு கடிதம்
இன்னும் இதயத்தின் இறுக்கத்தில்..
எங்கேயாவது இருக்கும்… அதுவரை
தேடிக் கொண்டே ………….


-முனியாண்டி ராஜ்.

நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...