Sunday, May 29, 2016

மௌனம் களவு படாமலேயே


ஓர் பெருத்த வெளியில்
அடர் மௌனத்தினூடே
என்னை அறுத்துக் கொண்டே வருகிறாய்
காற்றின் கரைச்சலில்
கலந்து போகும் ஒலிகளிலும்
காதுகளை ரணப்படுத்தும் இரைச்சல்களிலும்
என் மௌனம் களவு படாமலேயே
இருக்கிறது ....

தூரங்களில் மேயும்
என் பார்வைகள்
வெறும் வெறுமைக்கே உணவாகின்றன
எந்தச் சிறு தூண்டல்களிலும்
நான் துலங்க முடியாமல்
பெருத்த ஒரு வெளியில்
என்னைத் தேடிக் கொண்டே
வருகிறேன்.....
சுற்றிச் சுற்றி அலசும் விழிகளில்
நான் 
வேற்றுலகவாசியாகத் தெரியலாம்..
அவர்களின் மொழிகளில் 
நான் ஏதோ ஒருவகையில்
விமர்சிக்கப்படலாம்....

இருந்துவிட்டுப் போகட்டுமே..
செவிகளைச் செவிடாக்கும் ஒலிகளிலும்
காற்றைக் களங்கமாக்கும் புகைகளிலும்
அவையாவது கலந்து போகட்டும் ..

என் மௌனம் உடைபடாதவரை
நானும் கிரகவாசியாகவே!

*
முனியாண்டி ராஜ்.*

பொ.....றாமை!


உளைச்சல் நிறைந்த பொழுதில்
அந்த ஆமை
தெரிந்தே பாதம் 
எடுத்து வைத்தது...
மனதின் வரவேற்பறையில்
முகமன் எழுதி புன்னகை பெற்றது..
ஒவ்வொரு அறையாய்
விழி நுழைத்து 
அகல ஆழங்களை அளந்து பார்த்தது..

சுவரை அலங்கரித்த
மாலைகளையும் பதக்கங்களையும் 
அலசி அலசி மேய்ந்து ....
சான்றாய் விரிந்த சான்றிதழ்களில்
மனம் வெதும்பிப் புரண்டது...
புகைப்படங்கள் மீது
பெருமூச்சை விட்டெறிந்தது...

வாழ்த்துகளை வாயளவில்
அலங்கரித்து
வஞ்சனையை மனதோடு நிறுத்தி
ஆற்றாமையில்
ஒரு கொலைக்குக் காரணம் தேடி
மெதுவாக வெளியேறியது..
அந்தப் ..

பொ.....றாமை!

*
முனியாண்டி ராஜ்.*

வானவில்



மழையும் வெயிலும்
புணரும் பொழுதெல்லாம்
வாசல் கடந்து விரைகிறேன்..
நீ ஒடித்துப் போட்ட
வானவில் காண!

*முனியாண்டி ராஜ்.*

நஞ்சு



அன்பாய் அளவளாவி
ஆயிரம் பூக்கள் மனமெங்கும் மலர
ஆனந்தமாய் துள்ளிப் பறந்தேன்
பார்ப்போர் பழகுவோர் நண்பரென
நகமனைத்தும் வரைந்து வைத்தேன்..
நா மீட்டிய வார்த்தைகளில் 
நாள் நனைய குளித்தேன்..

வெண்மைச் சிரிப்பினில்
கனவுகளிலும் பூட்டினேன் தேர்
உள்ளத்துச் சொல்லனைத்தும்
உதடுகளிலேயே வலம் விட்டேன்
நம்பிக்கையில் கைகொண்டு

சட்டென 
நீலம் பூத்து உதிர்ந்தன
மனவெளி பூக்கள்..
எந்த நாவில் வசித்தது...

நஞ்சு !!!

Friday, May 13, 2016

ஒரு பழைய நாள்குறிப்பில் இருந்து...

 ….
ஒரு நீண்ட மழைக்குப்பின்
கொஞ்சமாய் நனைந்த கதிரவனின் கருணையில்
அந்த வானவில் வந்திருந்தது…...
ஒருசில வண்ணம் கலைந்து
சற்று மங்கி…..
தயங்கித் தயங்கி மேகங்களின் வழி
புது மணப்பெண் போல் எட்டிப் பார்த்துக் கொண்டே
அந்த வானவில் வந்திருந்தது..

எந்த ஒரு புதுச்செய்தியும் இன்றி
அதே வெட்கத்துடன்
ஒரு மெல்லியப் புன்னகையை உடுத்திக் கொண்டே
நாணம் கலந்த விழியில்
…. மீண்டும் கசிய விட்டது
அதே நினைவுகளை..
எழுதிய கவிதைகள் ஒவ்வொன்றையும்
நின்று…. படித்துக் கொண்டே
மெல்ல மெல்ல எடுத்துக் கொடுத்தது
பழமை பூசிய ஒரு காகிதத்தை…
படிக்கப்படாமல் விட்ட வரிகளை
முதன் முறையாகப் படித்து
புரிந்த பொருள் புரியா வகை நடித்து
புன்னகையில் பதிலளிக்க முயல்கையில்..
வண்ணம் சிதைந்த வானவில்லை
சட்டென்று மேகம் விழுங்க..
இடறிய பொழுதுகளில் சுதாரித்து எழுந்தேன்..
நானாகவே!
**முனியாண்டி ராஜ்.**

கயமை


ஊடுருவிச் செல்ல எத்தனிக்கும்
ஊமை விதிகளிலிருந்து
தப்ப முயலும் பொழுதுகளில்
மனதின் ஆழ வடுக்களைக்
கீற முயலும் இடைவெளிகளில் .....

கடந்துபோகும் ஒவ்வொரு பார்வையிலும்
நெளியும்
எக்காளச் சிரிப்புகள்...
விரச உரசல்கள்...
விகாரப் பார்வைகள்..
அகங்கார நடை அலங்காரங்கள்
அருவருப்பை உடலெங்கும் சீண்டும்!

சீழேறிப்போன பொய்ம்மை புண்ணைக்
கீறிக் கீறி
தனக்குத் தானே நக்கி நுகரும்
நாய்க்குண மிருதங்கள்...
தப்பித் தப்பி நகரும் வேளைகளில்
நாசுக்காய் நலம் விசாரிப்பதாய்
நஞ்சுதனை நாக்கில் வைத்திருக்கும்
கபடங்கள்...

ஜாக்கிரதை நண்பர்களே..
மற்றவர் முகத்தைச் சொரியும் முன்
சோதித்துக் கொள்ளுங்கள்...

உங்கள் முதுகெழும்புகளை!

**முனியாண்டி ராஜ்.*

கறபனைகளில் இன்னும் உன் ...


வழக்கம் போலவே
வந்து இறங்கியது அந்த நிழல்
வட்டங்களை விட்டு விலகிய போதும்
கட்டங்கள் கடந்து நடந்த போதும்
விலகி நின்று ...
விழிகளை மட்டும் பதித்திருந்தது..

அவசரங்களில்
சற்று மறந்து நிதானித்த போதும்
மறைவில் தன் வருகையை
உணர்த்தியவாறே சிரித்தபடி
அந்த நிழல் ...
தொட முயன்றும் தொட விடா
தூரம் நின்றே... ரசித்து
விளையாடியபடியே என்னிடம்..

கற்பனை நீளும் நேரம்
தூவல் கொடுக்கும் பணியாளாய்
ஓவியம் வரையும் நேரம்
தூரிகை நீட்ட துடிப்பவளாய்..
ஏதோ ஓர் ரூபத்தில்
உன் வருகை உணர்த்த
முயன்றபடியே.. நிழலாய்!
தொட முயலும் தருணமெல்லாம்
கானல் நீராய்....

சூரியன் அறையும் நேரம்
சட்டென விழிக்க....
ஜன்னலுக்கு வெளியே வெகுதூரத்தில்..

நிழலாகவே நீண்டு கொண்டு ...

**முனியாண்டி ராஜ்.***

என் மனமெங்கும் நீ


பூக்கள்...
இலைகள்...
கிளைகள்...
தளிர்கள் என ஒவ்வொன்றாய்
உன் முகவரி நாடி வியர்த்தேன்...
நீயோ ..
என் வேர்களெங்கும் வியாபித்திருந்தாய்

**முனியாண்டி ராஜ்.

நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...