Sunday, June 5, 2016

உடல் மறந்த மனம்

என்னுடனே வந்து கொண்டிருந்தது
அந்த மழை..
சாளர ஓரம் தேடி அமர்ந்து
உனக்குக் கையசைத்து புன்னகைத்து
விடைபெறும் நேரம் வரை
பொறுமை காத்த வானம்
திடீரென உடைந்து விழுந்தது போல்...
சாளரக் கண்ணாடிகளில்
ஓங்கி ஓங்கி அறைந்து
இடிகளின் உரத்தக் குரல்களினால்
எதையோ சொல்ல முயன்று..
மின்னல் வீச்சுகளிலும் என்னவோ
பார்க்கக் கூறி...
ஓ வென அலறியபடி
என்னுடனே வந்து கொண்டிருந்தது
அந்த மழை ..
ஓரிரண்டு நிறுத்தங்களில்
உடல் முறுக்க எழுந்திருப்போரில்
என்னைக் காணாது
கொஞ்சம் தேடித் தேடி அலுத்து
மீண்டும்
உரத்தக் குரலில் ஓ வென
அழத் தொடங்கியிருந்தது .......,
சாளர ஓரத்தில்
இருக்கையோடு இருக்கையாக
இணைந்து போயிருந்த என்னைக் காணாது
அங்கும் இங்கும் நீர்த்தூவலை இறைத்து..
மணியாச்சி ....
இன்னும் கிளம்பலியா என்ற குரலில்
மனம் மீண்ட போது ...
பேருந்து
வெகுதூரம் சென்றிருந்தது...
கூடவே உடலும்!!!
*முனியாண்டி ராஜ்.*
LikeShow More Reactions
Comment

உடைய முடியாத நட்பு

ஒரு மூளைச்சலவைக்குள்
நான் வீழ்த்தப்பட்டதாக
நீ எண்ணிக் கொண்டிருக்கலாம்....
உன் விவாதக் கணைகளில்
நான் காயப்பட்டு விட்டதாக
நீ நம்பிக் கொண்டிருக்கலாம் ....
உன் இதழின் ஓரமாக வழிந்த
ஒரு கேலிப்புன்னகையை
நான் காணாமல் போயிருப்பதாக
உன்னை
நீயே ஏமாற்றுக் கொண்டிருக்கலாம்

எதிர்பார்த்த உன் வினாக்களிலும்
நான் எதிர்பாரா விடைகளிலும்
உன் மனம் காயப்படுவதை
நானும் விரும்பவில்லை...
வளர்ந்து செழித்த செடியில்
வார்த்தை விஷங்கள்
வேர்களில் இறங்கி ஊடுருவதை
நான் வெறுத்தே வருகிறேன்..
கேலிப்புன்னகைகளுக்கும்
நக்கல் வார்த்தைகளுக்கும்
நான் எப்போதுமே
குடை சாய்வதில்லை.....

மனம் கீறிய வார்த்தைகளை விடவும்
அறிவைத் தாக்கிய அம்புகளை விடவும்
விருட்சமாய் விரிந்த
.... நட்பே...
எனக்குப் பெரிது!

*முனியாண்டி ராஜ்.*

படைப்பு


அவரசங்களில் தொலைந்த மனிதர்கள்

அவரசங்களில் தொலைந்த மனிதர்கள்
••••••••••••••••••••••••••••••••••

அவசர ஆடைகளை அணிந்து கொண்டு 
ஓடிக்கொண்டுதான் இருக்கின்றனர்
முகம் இருப்பதே
மறந்து போன பலருக்கு
முகவரி மறந்தும் நாளாயிருக்கலாம்..
காகித நோட்டுகளில்
மனம் கழன்றவர்களும்
நிலம் வீடுகளில் மனிதம்
மறந்தவர்களும்....
ஓடிக்கொண்டேதான்!

மூன்றாம் மனிதர்களும்
முக்குகளில் முகம் நனையும்
வியர்வை உடல்களும்
அவசரங்களில் யாரும் அறிவதில்லை....
தன்வெளிகளில் தினமும்
எதையோ தேடித் தேடித்
தங்களைத் தொலைக்கும் உருவங்கள்
அவசர மனிதர் கண்களுக்குப்
படுவதேயில்லை....

தேடலில் களைத்து
மனம் அசரும் போதே..
தேடி எடுத்தவை
விரல்களின் வருடல்களுக்கென
ஆன பிறகோ...
நீண்ட வெளிதனில்
விடுபட்ட மனிதங்களை நோக்கி
மனம் திரும்புகையில்.....

உன் பிறவி
உன்னைக் கடந்து சென்றிருக்கலாம்!

*முனியாண்டி ராஜ்.*

ஏமாற்றுப் பார்வைகள்

தெருவில் பதியும்
உன் காலடி ஓசையில்
உறக்கத்தை உதறிவிட்டு
ஓடி வருகிறது என் பொழுது...
வழக்கம் போலவே
சாலை விளக்குகளில்
என்னைத் தொலைத்து விட்டு
மறைகிறாய் ... நீ!
- முனியாண்டி ராஜ்.

இதயத்துள் இறங்கிய மழை

குடைகளுக்குள் சிக்காத
ஒரு மழையைத் துரத்துவதாய்
வீட்டின் வெளியே விரைகயில்
ஆலங்கட்டி மழையைப் போல்
அதிசயமாய்.....
உன் விழிகளை
இதயத்திற்குள் இறக்கி விட்டுச்
சென்றாய்....
குடை நனைய!

*முனியாண்டி ராஜ்.*

சொல்ல முடியாத சில கவிதைகள்

ஒரு பரஸ்பர விசாரிப்பில்
எதையோ எடை போட முயன்று
இருவருமே தோற்றுப் போகிறோம்
இறுக்கமான ஓர் இடைவெளியில்
பரஸ்பரங்களைத் தாண்ட
தடையாகவே கருதுகிறோம்
நட்பின் மெல்லிய கோடுகளை...

கோடுகள் மீறும் எந்த ஒரு வார்த்தையும்
விரிசல்கள் என அஞ்சி
அப்படியே அடக்கிக் கொள்கிறோம்
எதையோ ஒன்றை ..
குறுந்தகவல்களும் சரி
புலனப் பரிமாற்றங்களும் சரி..
அச்சத்தின் ஊசலில் ஆடிய படியே....

வாசல்வரை வந்தும்
அப்படியே தொண்டைக்குழிக்குள்
அடங்கிப் போன என் பொழுதுகளை
உனக்கெப்படி உரைப்பேன்..
விழிகளில் நீ காட்டும்
சில நேர பச்சைக் கொடிகளில்
விலக்கிக் கொள்ள முடியாமலேயே
தவிக்கிறேன்..
ஆழ்ந்து போயிருக்கும் ஓர் நட்பினில்..

காதல்..
கண்டம் மறுத்துக் கொண்டே !!

*முனியாண்டி ராஜ்.*

கயல்விழி


தூண்டிலும்
இரை மாட்டப்படாத முள்ளும்
அப்படியே இருந்தன ஆற்று மேட்டில்!
துள்ளிக் குதிக்கும் கயல்களோடு
ஆற்றின் அக்கரையில் நீ!

*முனியாண்டி ராஜ்.*

Sunday, May 29, 2016

தவமாய் கிடக்கின்றன


வாசலில் வரிசை பிடித்திருக்கும்
ஒவ்வொரு செருப்பும்
தவமாய் கிடக்கின்றன..
உன் பாதம் சுமக்க!

உன் விழி மோதும்


விபத்து அனுபவம்
இருக்கிறதா எனக் கேட்கிறாய் 
எவ்வாறு சொல்வேன்
உன் விழி மோதும்
ஒவ்வொரு கணமும் காயப்பட்டு
மீண்டும் மீண்டும் உயிர்பெற்றே
வருகிறேன் என்று!

நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...