Sunday, June 5, 2016

உடல் மறந்த மனம்

என்னுடனே வந்து கொண்டிருந்தது
அந்த மழை..
சாளர ஓரம் தேடி அமர்ந்து
உனக்குக் கையசைத்து புன்னகைத்து
விடைபெறும் நேரம் வரை
பொறுமை காத்த வானம்
திடீரென உடைந்து விழுந்தது போல்...
சாளரக் கண்ணாடிகளில்
ஓங்கி ஓங்கி அறைந்து
இடிகளின் உரத்தக் குரல்களினால்
எதையோ சொல்ல முயன்று..
மின்னல் வீச்சுகளிலும் என்னவோ
பார்க்கக் கூறி...
ஓ வென அலறியபடி
என்னுடனே வந்து கொண்டிருந்தது
அந்த மழை ..
ஓரிரண்டு நிறுத்தங்களில்
உடல் முறுக்க எழுந்திருப்போரில்
என்னைக் காணாது
கொஞ்சம் தேடித் தேடி அலுத்து
மீண்டும்
உரத்தக் குரலில் ஓ வென
அழத் தொடங்கியிருந்தது .......,
சாளர ஓரத்தில்
இருக்கையோடு இருக்கையாக
இணைந்து போயிருந்த என்னைக் காணாது
அங்கும் இங்கும் நீர்த்தூவலை இறைத்து..
மணியாச்சி ....
இன்னும் கிளம்பலியா என்ற குரலில்
மனம் மீண்ட போது ...
பேருந்து
வெகுதூரம் சென்றிருந்தது...
கூடவே உடலும்!!!
*முனியாண்டி ராஜ்.*
LikeShow More Reactions
Comment

No comments:

Post a Comment