Sunday, June 5, 2016

சொல்ல முடியாத சில கவிதைகள்

ஒரு பரஸ்பர விசாரிப்பில்
எதையோ எடை போட முயன்று
இருவருமே தோற்றுப் போகிறோம்
இறுக்கமான ஓர் இடைவெளியில்
பரஸ்பரங்களைத் தாண்ட
தடையாகவே கருதுகிறோம்
நட்பின் மெல்லிய கோடுகளை...

கோடுகள் மீறும் எந்த ஒரு வார்த்தையும்
விரிசல்கள் என அஞ்சி
அப்படியே அடக்கிக் கொள்கிறோம்
எதையோ ஒன்றை ..
குறுந்தகவல்களும் சரி
புலனப் பரிமாற்றங்களும் சரி..
அச்சத்தின் ஊசலில் ஆடிய படியே....

வாசல்வரை வந்தும்
அப்படியே தொண்டைக்குழிக்குள்
அடங்கிப் போன என் பொழுதுகளை
உனக்கெப்படி உரைப்பேன்..
விழிகளில் நீ காட்டும்
சில நேர பச்சைக் கொடிகளில்
விலக்கிக் கொள்ள முடியாமலேயே
தவிக்கிறேன்..
ஆழ்ந்து போயிருக்கும் ஓர் நட்பினில்..

காதல்..
கண்டம் மறுத்துக் கொண்டே !!

*முனியாண்டி ராஜ்.*

No comments:

Post a Comment