Sunday, June 5, 2016

அவரசங்களில் தொலைந்த மனிதர்கள்

அவரசங்களில் தொலைந்த மனிதர்கள்
••••••••••••••••••••••••••••••••••

அவசர ஆடைகளை அணிந்து கொண்டு 
ஓடிக்கொண்டுதான் இருக்கின்றனர்
முகம் இருப்பதே
மறந்து போன பலருக்கு
முகவரி மறந்தும் நாளாயிருக்கலாம்..
காகித நோட்டுகளில்
மனம் கழன்றவர்களும்
நிலம் வீடுகளில் மனிதம்
மறந்தவர்களும்....
ஓடிக்கொண்டேதான்!

மூன்றாம் மனிதர்களும்
முக்குகளில் முகம் நனையும்
வியர்வை உடல்களும்
அவசரங்களில் யாரும் அறிவதில்லை....
தன்வெளிகளில் தினமும்
எதையோ தேடித் தேடித்
தங்களைத் தொலைக்கும் உருவங்கள்
அவசர மனிதர் கண்களுக்குப்
படுவதேயில்லை....

தேடலில் களைத்து
மனம் அசரும் போதே..
தேடி எடுத்தவை
விரல்களின் வருடல்களுக்கென
ஆன பிறகோ...
நீண்ட வெளிதனில்
விடுபட்ட மனிதங்களை நோக்கி
மனம் திரும்புகையில்.....

உன் பிறவி
உன்னைக் கடந்து சென்றிருக்கலாம்!

*முனியாண்டி ராஜ்.*

No comments:

Post a Comment