Wednesday, October 19, 2016

உன்னோடு_சில_நாள்....


வருடங்களின் மடித்து வைத்த
நினைவுகள் புரட்டப்படும் போதெல்லாம்
ஓரிரு துளிகள் விழிகளிலிருந்து
நழுவுவதைத்
தவிர்க்கப்பட முடியவில்லைதான் பெரும்பாலும்
நிறம் மாறிப்போன
ஒரு புகைப்படத்தில் மட்டுமே
நீ இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறாய்..

ஆளில்லா நீள்இருக்கையில்
உன் பிம்பத்தோடு
ஏதோ பேசிக்கொண்டிருக்கிறேன்
முதலில் பாவத்தோடு பார்த்தவர்கள்
இப்போது
பைத்தியமாய்ப் பார்க்கிறார்கள்
அதைத் தவிர வேறில்லை.....
எதையாவது பேச வேண்டுமென்று
நெருங்குபவர்களும்
புதிரான பார்வைவை மட்டும்
விட்டுச் செல்கிறார்கள் சோகமாக!

வழக்கமாக நடக்கும் ஒற்றையடிப்பாதையும்
நெடுஞ்சாலைகள் அபகரிப்பால்
பேயாட்டம் போடுகின்றன
கால்நனைக்கும் அந்த ஆறும்
ஓடையாகி ஒண்டிப்போய் நிற்கிறது
நிழல்மரங்கள் ...நிஜமரங்கள் என்ற
கோட்பாடுகளைத் தாண்டிப் போய்விட்டன
இப்படி நிறைய..
உன் நினைவுகளை என்னிடமிருந்து
பிரிப்பதற்காக..

பழகிப்போனவர்களுக்கு
உன் முகம் மறந்திருக்கலாம்
இன்னும் எவ்வளவு நாள்களுக்கு
எனக் கேட்டவர்கள்..
நாக்கைக் கடித்துக் கொண்டு
நாசுக்காக நகர்ந்து போகிறார்கள்
உதடுகளுக்குள் சிரித்துக்கொண்டு
அவர்கள் மொழியில் ஏதேனும்
பெயரும் வைத்திருக்கலாம் எனக்காக

ஒரு வேறுபாட்டைச்
சொல்லித்தான் ஆக வேண்டும்..
முன்பெல்லாம் கவிதைகளை
எடுத்தாண்டு பெருமித்தேன்..
உனக்காக..
இப்போதெல்லாம் எழுத்தாளினும்
பெருமிப்பதேயில்லை...
நீயின்றி!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment