Wednesday, October 19, 2016

போரின் மெல்லிய இடைவெளிகளில் ...



போரின் மெல்லிய இடைவெளிகளில் ...
===•••===•••===•••==•••===•••==
கொழுத்த அரபுக்குதிரையின் முதுகில்
பிட்டம் அழுத்தி 
திசையெங்கும் மேய்ந்தன அவன்விழிகள்
கனத்தஅவன் மௌனத்தின்
பொருள்புரியாது விழித்துக் கொண்டிருந்தது
அப்புரவி
தடித்த அவன் கட்டளைக்காக
காத்துக்கிடந்தன வேட்டைப் படைகள்
குருதிக்கரை இன்னும் மறையாத
வாளினை ஒருகணம் உருவி
மீண்டும் உறையில் செலுத்தினான்
விழிகள் வீசிய தூரங்களில்
எதிராளி யாருமிருப்பதாய் தெரியவில்லை
தனக்குள் தவிர..
ஒருதடவை மேலும்கீழும்
தன்னையே பார்த்துக் கொண்டான்
வீசிய வாளால்
வாழைத்தண்டாய் சரிந்த அவள்தேகம்
ஒருமுறை கண்முன் வந்துமறைய
தன்படைகளை நோக்கினான்
குருதிசுமந்த வாள்களின் வாடையில்
சடாரெனத் திரும்பிக் கொண்டான்
ஒருபெருத்த மௌனத்தை
அரபுக்குதிரை கர்ஜித்துக் கலைத்தது
மீண்டும் அவளே கண்முன் வந்தாள்
ஏதோ ஒன்றை நோக்கி
...அவள்கரங்கள் நகர்வதுபோல்
...அவள்கால்கள் மணலைக்கிழிப்பதுபோல்
...பார்வை யாரையோ வேண்டுவதுபோல்
...சில வார்த்தைகளை அவள்உதடுகள்
மீண்டும் மீண்டும் உச்சரிக்க .......
படைகள் சிலையாய்ச் சமைய
விர்ரெனத் திரும்பிய அந்த அரபுப்புரவி
ஒரு பாலைவனப்புயலை எழுப்பிவிட்டுப்
பறக்கத் தொடங்கியது..

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment