Friday, February 10, 2017

மனம் இருக்கும் இடம்



மனம் இருக்கும் இடம்
===•••===•••===•••
இதயத்தை இழுத்துக் கொண்டு
நடந்த அவனை
அனைவரும் வியப்பாய்தான் பார்த்தனர்
சிலர் பைத்தியமென்றும்
அவனைப் பரிகாசம் செய்திருக்கலாம்
இதயம்
அவனுடன் வர முரண்பட்டிருக்க வேண்டும்

நான்கைந்து பேர் சேர்ந்து தள்ளிவிட
அது வாகனமல்ல என
உணர்ந்தோர் பார்வைகளில் மட்டும்
கொஞ்சம் கரிசனம் இருந்தது
ஏதோ ஓர் ஏமாற்றத்திலோ
விரக்தியிலோ...
வெறுப்பிலோ..
துரோகத்திலோ...
அவன் இதயம்
கழன்று விழுந்திருக்கக் கூடும்..
மாற்றம் தேடும்
அவன் மனப்போராட்டத்தின் உச்சியில்
அதுவும்
ஒரு மரணப் போராட்டம்
நடத்திப் பார்த்திருக்கக் கூடும்....
அது சரி...
இதயத்தைக் கைநீட்டி சுட்டும்
நீங்கள்.....
மனம் எங்கிருக்கிறதென மட்டும்
காட்டிவிட்டு....
விலகிச் சென்று விடுங்கள்..
அந்த இடத்தில் இதயத்தைப் பூட்டி
அவன்
விர்ரென நடந்து விடுவான்..

#முனியாண்டி_ராஜ்.


இது_கவிதையல்ல..

எப்படியோ
நகர்த்தித்தான் ஆக வேண்டும்
இந்த வாழ்க்கையை எனும்போது
ஒவ்வோர் ஆண்டும்
இந்த
மன்னிப்பு என்ற ஆடையைத்
துவைத்துத் துவைத்துதான்
உடுத்திக் கொள்ள வேண்டுமென்ற
ஒரு பொய்ப்பயணத்தில்
என்னால்
பயணிக்க முடியாமலேயே போகிறது..

உடையாத நீர்க்குமிழி


ஒரு தூக்கத்தின் கதை 01



ஒரு தூக்கத்தின் கதை 01
===•••===•••===•••=
நீங்களும் நானும் 
கடந்து வந்த கதைதான்
இது!
இருள் இறுக அணைத்தும்
குளிர் போர்வைகளுக்குள் ஒளிந்தும்
மனம் மட்டும்
விழிகளுக்கு வெளியே நிற்குமே
அதே கதைதான்..

இமைகளை இறுக்கிச் சாத்தியும்
இதய வெளிகளுக்குள் ஊடுருவும்
ஆட்டுக்குட்டிகளை எண்ணியும்..
விடையற்ற கணக்கு ஒன்றில்
விடை தேட முயல்வதுபோல்
உறக்கங்களைத் துரத்தித் துரத்தி
உவகின் எல்லைவரை ஓடியும்
தொலைந்தது தொலைந்ததாகவே
இருக்குமே...

ஏமாற்றங்களின் சாயல்களில்
விழும்போதும்
கோபங்களின் தொடர்ச்சியில்
துவளும்போதும்
விசனங்களின் விரட்டல்களில்
விம்மும்போதும்
எதிர்பார்ப்புகளின் எள்ளல்களில்
எழும்பும்போதும்
அச்சத்தின் அச்சுறுத்தல்களில்
அல்லல்படும்போதும்
படபடப்புகளின் படையெடுப்பில்
பதறும்போதும்

இந்தத் தூக்கம் மட்டும்
விழிகளைவிட்டு வெளிநடப்பு செய்கிறது
பல வேளைகளில்....
இமைகளுக்கு மேல் அமர்ந்து கொண்டு
இதயத்தைத் துழாவுகிறது
சில வேளைகளில்...

அதே கதைதான்..
நீங்களும் கடந்திருக்கக் கூடும்!
( படரும் )

#முனியாண்டி_ராஜ்.

நிறமற்ற ஒரு கடவுளின்



ஒரு வெற்றிடத்தில் இருந்துதான்
இதைத் தொடங்குகிறேன்
பொதுவெளிகளுக்குள் அழுக்கில்லாத
ஓர் இடத்தினைப் பிடித்து
மனிதர்களிலில்லா ஒரு மதத்தினை
தேடிப் பிடித்து
நிறமற்ற ஒரு கடவுளின்
கையை இறுக்கியணைத்து
இந்தப் பயணம் தொடங்குகிறேன்

நீட்டியெழும் கரங்களுக்குள்
ஒவ்வொரு வண்ணமாய்
ஒரு வேதப் புத்தகம்
உதிர்ந்து விழும் வார்த்தைகளுக்குள்
என் சக்கரம் சிக்கிடாமல்தான்
பயணிக்க முயற்சிக்கிறேன்
சகதிகளிலும் சாக்கடைகளிலும்
சக்கரம் விழுந்தெழுவதைத்
தவிர்க்க முடியாமலேயே எழுந்தெழுந்து
தொடர்கிறேன்.....

யாரோ ஒரு கடவுளுக்குள்
விழும்வரை நீயும் செல்
எனச் செவியறையும் குரல்களில்
செவிடாகத்தான் செல்கிறேன்
வீழும்வரை அல்ல ..
யாரேனும் வீழ்த்தும்வரை!

#முனியாண்டி_ராஜ்.

கடலை விழுங்கும் அலைகள்




கடலை விழுங்கும் அலைகள்
===•••===•••===•••===•••
பகலைக் கரைத்து
இரவுக்குள் இழுக்கும் முயற்சிகளில்
அலை விடாது
கரைகளை உரசிக்கொண்டே இருந்தது
வெண்மணல்கள் கருமைக்குள் விழும்
அந்த நேரத்தில்தான்
ஈரம் விழாத ஓரங்களில்
நடந்து கொண்டிருந்தேன் உன்னுடன்
ஏதோ ஒரு கூச்சத்திலோ அச்சத்திலோ
வளைகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டிருந்தன
குறு நண்டுகள்
சொல்ல முடியாமல் தொண்டைக்குள்
பதுங்கும்
சில சொற்கள் மாதிரி....

நீண்ட ஒரு உஷ்ண மூச்சுக்குப்பின்
சிறியதொரு முறுவலை வீசினாய்
வார்த்தைகளின் தொடக்கம்
அதுவாகத்தான் இருக்க வேண்டும்
ம்..என்று எதையோ
தொடங்க நினைத்து..
மீண்டும் வளைக்குள் விழுந்தது
நண்டு

நீயாகத்தான் ஆரம்பித்தாய்
'இன்றுகூட பிள்ளைகள் கேட்டார்கள் ..
அப்பா வருவாரா என்று' ...
ஒரு பார்வையில்
உன்னைஅளவிட முயன்று
என்னை நானே அழித்துக் கொண்டிருந்தேன்
உறைகளில் உறங்கியிருந்த
மணவிலக்குப் பாரங்கள் மெல்ல
எட்டிப் பார்த்து பதுங்கிக் கொண்டன

தெரிந்தோ தெரியாமலோ உரசிய
விரல்களில்
இத்தடவை எத்தீயும் பற்றவில்லை..
இருளை முழுவதுமாக விழுங்கிய
திருப்தியில்
கடல் உறங்கத் தொடங்கியிருந்தது

அலைகளை மட்டும் அனுப்பிக் கொண்டு!

#முனியாண்டி_ராஜ்.

துளிப்பா 06

எவ்வளவு கழுவியும்
அழுக்கு மட்டும் போகவில்லை
பாவத்தின் நோட்டுகளில்
#முனியாண்டி_ராஜ்.

கலங்கும்வரை காத்திருந்துவிட்டு
உறுமீன் பிடிக்கத் தொடங்கின
காரியக் கொக்குகள்

அவர்கள் மட்டும் ஏழைகளல்ல



அவர்கள் மட்டும் ஏழைகளல்ல
===•••===•••===•••===••
அவர்களின் காயங்களைக்
காட்டச் சொன்னார்கள்
கூன்விழுந்த முதுகுகளின் வரிகள் 
இவர்களுக்குக் காயமாகப் படவில்லை
காய்த்துப்போன கைகளின் கொப்புளங்கள்
உழைப்பில்லையென நிராகரிக்கப்பட்டன
செருப்பின்றி நடந்த பாதங்களின்
நிறமிழந்த அடிகள்
பூசப்பட்ட பொய்களென
ஒதுக்கி வைக்கப்பட்டன

ஈரத்துணி கட்டிப்பழகிய
ஒட்டிய வயிறுகளை
உணவுக் கோளாறுகள் என்றார்கள்
ஒடுக்குவிழுந்த விழிப்பள்ளங்களை
ஊட்டச் சத்தின்மையென
உறுதியாகச் சொன்னார்கள்
கருமையடைந்த தோல்களின் வலியை
கோடையின் கொடுமை என்றார்கள்

காற்றுக்கே அஞ்சும் ஓலைக்குடிசைகள
இடப்பற்றாக்குறையென
இதமாகச் சொன்னார்கள்
பசிகளில் மரிக்கும் உயிர்களின்
பெயர்களையாவது எழுத

எப்படியோ...
ஏழ்மையென்பது ஏழைகளின் விதியல்ல என
ஐந்து நட்சத்திர விடுதியின்
வட்ட மேஜை விருந்துகளில்
மீண்டும் அமர்ந்தனர் கூடிப் பேச!

#முனியாண்டி_ராஜ்.

சாமிகளில் ஆசாமிகள்

சாமிகளில் ஆசாமிகள்
===•••===•••===•••
சாமி கண்ணைக் குத்தும்
தொட்டுக் கும்பிட்டுக்கோ என்றபடியே
தாத்தா
கடவுளைக் கண்ணுக்குள் வைத்து மிரட்டினார்
இன்றும்
தாள்கள் மிதிபடும்போதெல்லாம்
கண்ணில் ஒற்றிக் கொண்டு
கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்
வாசலில் உண்டியலோடும்
கடவுள் படத்தோடும் நிற்கும் போதெல்லாம்
காணிக்கையைத் தவறாமல்
போட்டு விடுகிறேன்
சாமியேதும் கண்ணைக் குத்துமோ
என்ற அச்சத்தில்
கோவில்களைக் கடக்கும் போதெல்லாம்
கைகள் கன்னம் ஒத்திப் போகின்றன
திருவிழா கூட்டங்களிலும்
சாமியிறக்கி ஆடுபவரையும்
தயக்கத்துடன் வழிபடவே முயல்கிறேன்
காளான்களென பூத்துவரும்
சிறுசிறு தெய்வங்களுக்கும்
சேர வேண்டியவை சரியாகவே
பொருந்தி விடுகிறது
சாமி கண்ணைக் குத்தும்யா
கண்ணில் ஒத்திக்கோ என்ற
என்னைப் பார்த்து
மகன் கேட்கிறான்
கோடிக் கோடியாய் கோவில் பணத்தில்
வாழ்பவனையும்
கடவுள் காணிக்கைகளில்
குளிர்க் காய்பவனையும்
சாமி நகைகளில்
சம்சாரத்தை அலங்கரிப்பவனையும்
ஏம்பா .....
சாமி கண்ணைக் குத்தவில்லை...

நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...