Wednesday, October 19, 2016

திருவிழா வேண்டி



திருவிழா வேண்டி ....
===•••===•••===••
நீண்டுவிரிந்த நெடுஞ்சாலைகளிலும்
கைகுலுக்கிக் கொள்ளும் கட்டடங்களிலும்
சற்று ஒதுங்கிநின்ற அந்தஊர்
கொஞ்சம் செத்தே போயிருந்தது
நோயுற்றுப்போன அந்தச் சாலையின் வளைவில்
அந்த ஊரின்கீழ் 2 km என இருப்பதைப்
புதர்கள் விளக்கினால் படிக்கலாம்
சிறிய கடைத்தெரு என்றோ
சின்ன பட்டணம் என்றோ
பெரிய கிராமம் என்றோ
எப்படியாவது வைத்துக் கொள்ளுங்கள்
அந்த மைல்கல் பார்த்தே பசிநிறைத்த
காலமெல்லாம் உண்டு
தூரத்தின் வாசனையில்
கடைத்தெரு உணவுகள் நாசிக்குள்
நுழைவதெல்லாம் இருந்த காலம்
நெடுஞ்சாலை விலக்கிப் போகையில்
இன்றும் அக்கல் கண்ணில்..
ஒருமஞ்சள்துணி சுற்றப்பட்டு
சிவப்புப் பொட்டிட்டு
ஓரிரு வாழைப்பழ ஊதுபத்தியுடனும்!
தயாராகவே இருங்கள்...
.... இன்னும் சிலநாள்களில்
யாராவது வசூலூக்கு வரலாம்
தங்களுக்கான கோவில்களுக்கு!

#முனியாண்டி_ராஜ்

பேரவைக் கதைகள்


மலாயா பல்கலைக்கழகத்தின் பேரவைக் 
கதைகள் 30 இல் என்னுடைய சிறுகதை ஆறுதல் பரிசு RM 300 பெற்றது.
#குறிப்பு
#இது_நான்_எழுதிய_முதல்_சிறுகதை_என்பது_குறிப்பிடத்தக்கது,

கவிதைகள் பக்கம் மட்டுமே விரிந்த என் சிறகுகள் முதன்முறை சிறுகதை பக்கம் பறந்திருக்கிறது

#அவதாரங்கள்_ஒருமுறை_மட்டுமல்ல..


#அவதாரங்கள்_ஒருமுறை_மட்டுமல்ல..
===•••===•••===•••===•••===••
அரக்கர்படைசூழ மிடுக்குடன்
நடந்து வந்தான் நரகன்
வழியெங்கும் அவன் கடித்துத் துப்பிய
எலும்புத்துண்டங்களின் வீச்சத்தில்
உயிர்தவிக்கும் மனிதங்களும்
சற்று மூச்சடக்கிக் கொண்டன
ஓடிஓடி ஒளிந்த நரன்களை
தேடித்தேடியெடுத்து விருந்தாக்கினான்
தேவர்களின் அலறலிலும்
நரர்களின் நடுக்கத் தேம்பல்களிலும்
சட்டென கண்விழித்த கடவுள்
புதிய பரிணாமத்தில் பழிதீர்க்க...
--------------
ஒருமரணத்தின் கொண்டாட்டதில்
வன்முறைகள் மீண்டும் கலந்தன
மதுபான ஆடம்பரங்களில்
நரகன்கள் பலர்தோன்ற..
இன்னொரு அவதாரம் கேட்டு
நரகாசுவரன் மீண்டுமொருமுறை
பிறந்து வரலாம்!
தேவர்களும் நரர்களும்
வதைபடலம் வேண்டி
திரும்பவும் ஒருதவம் மேற்கொள்ளலாம்!!

#முனியாண்டி_ராஜ்.

காத்திருக்கும் தேவை

அவர்கள் வீட்டில்
எப்பொழுதாவதுதான் மழைபெய்யும்
தேவையான நாள்களுக்கு 
பாத்திரங்களும் 
பொறுக்கியெடுத்த சாய டின்களும்
தங்கள் வயிறுகளை நிரப்பிக்கொண்டு
காத்திருக்கும் தேவைகளுக்கு
குழாய்களே இல்லா இடங்களில்
மழை
அவர்கள் காத்திருக்கும் தேவதைகள்!
கனவுகாணும் இரவுகளில்
அவர்களின் குழந்தைகள்
நட்சத்திரங்கள் எண்ணியே
கணிதம் கற்றார்கள் படுத்த படியே..
கொஞ்சம் மழைக்காகவும்
நிறைய நட்சத்திரங்களுக்காகவும்
அவர்களும்
எப்போதாவது கொஞ்சம்
கனவு காண்பதெல்லாம் உண்டு..
திடீரென உரசும் வெயில்களில்
சட்டென தீப்பிடிக்கும் போதெல்லாம்
சேகரித்த மழைநீர்
அவர்களைக் காப்பாற்றுவதே இல்லை..
நட்சத்திரங்கள் மட்டும்
வழக்கம் போலவே அவர்களுக்கு
கணக்கிட உதவும்..
மீதமுள்ள நாள்கள் கழிப்பதற்கு!



கல்லறை


அவனும் இங்கு வாழ்ந்ததாய்தான்
கூறுகிறார்கள்..
உன்போல் என்போல்
உண்டு உடுத்தி
குடும்பம் நடத்தி
படித்துக் கிழித்து...
வாழ்ந்ததாய்தான் கூறுகிறார்கள்
சான்றுகளும் காட்டுகிறார்கள்
வரிசை வீடுகள்..
மண்சுமந்த நிலவிரிப்புகள்..
கல்லாலும் மண்ணாலும் ஆன
ஓரிரு கட்டடங்கள்
அப்பனென உரிமையேற்க
ம்ம்ம்... பிள்ளைகள்..
இத்யாதி .... இத்யாதி..
கடைசியாய் கோட்டைபோல்
ஒரு கல்லறை..
அவனும் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்
பூமியில் மட்டும்!

#முனியாண்டி_ராஜ்.

ஹைக்கூ 04



தேர்தல் சங்கொலியில்
சோம்பல் முறித்து எழுந்தன
சாதிச் சங்கங்கள்

#முனியாண்டி_ராஜ்.

நானும் உனக்கான கவிதையும்..



நானும் உனக்கான கவிதையும்..
===•••===•••===•••===•••=======

மின்விசிறியின் சீற்றத்தில்
அங்கொன்றும் இங்கொன்றும் பறந்திருந்த
காகிதங்கள் ஒவ்வொன்றாய்
பொறுக்கத் தொடங்கினேன்..............

சில எழுத்துகளிலும்
சில சொற்களிலும்
சில வரிகளிலும்
முடங்கிப் போய் அமர்ந்திருந்தன...............

உன்னைப்பற்றி கேட்காமல் எழுதிய
கவிதைகளைவிட...
நீ கேட்ட போது எழுதத் தொடங்கியவை
இன்னும் தவழ்ந்து கொண்டே...............

நீ மட்டும்
ஏதோ ஒரு எதிர்பார்ப்பில்
இமைக்கம்பிகளைப் பிடித்தவாறே
விழிகளோரத்தில்......!!!!

#முனியாண்டி_ராஜ்.

ஹைக்கூ 03

புத்தக வெளியீடு
இருக்கைகள் நிறைந்திருந்தன
பறவைகளின் எச்சம்

ஹைக்கூ 02



நீண்டிருந்த சாலை நெரிசலில் 
மனம் இலயித்திருந்தது
கையில் புத்தகம்

*********************
வழிகள் கனத்தும்
இறக்கி வைக்க முடியவில்லை
உன் நினைவுகளை

*********************
திருமண வீடெங்கும்
களை கட்டியிருந்தது மௌனம்
கைப்பேசியில் விருந்தினர்கள்

********************************
#முனியாண்டி_ராஜ்.

உன்னோடு_சில_நாள்....


வருடங்களின் மடித்து வைத்த
நினைவுகள் புரட்டப்படும் போதெல்லாம்
ஓரிரு துளிகள் விழிகளிலிருந்து
நழுவுவதைத்
தவிர்க்கப்பட முடியவில்லைதான் பெரும்பாலும்
நிறம் மாறிப்போன
ஒரு புகைப்படத்தில் மட்டுமே
நீ இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறாய்..

ஆளில்லா நீள்இருக்கையில்
உன் பிம்பத்தோடு
ஏதோ பேசிக்கொண்டிருக்கிறேன்
முதலில் பாவத்தோடு பார்த்தவர்கள்
இப்போது
பைத்தியமாய்ப் பார்க்கிறார்கள்
அதைத் தவிர வேறில்லை.....
எதையாவது பேச வேண்டுமென்று
நெருங்குபவர்களும்
புதிரான பார்வைவை மட்டும்
விட்டுச் செல்கிறார்கள் சோகமாக!

வழக்கமாக நடக்கும் ஒற்றையடிப்பாதையும்
நெடுஞ்சாலைகள் அபகரிப்பால்
பேயாட்டம் போடுகின்றன
கால்நனைக்கும் அந்த ஆறும்
ஓடையாகி ஒண்டிப்போய் நிற்கிறது
நிழல்மரங்கள் ...நிஜமரங்கள் என்ற
கோட்பாடுகளைத் தாண்டிப் போய்விட்டன
இப்படி நிறைய..
உன் நினைவுகளை என்னிடமிருந்து
பிரிப்பதற்காக..

பழகிப்போனவர்களுக்கு
உன் முகம் மறந்திருக்கலாம்
இன்னும் எவ்வளவு நாள்களுக்கு
எனக் கேட்டவர்கள்..
நாக்கைக் கடித்துக் கொண்டு
நாசுக்காக நகர்ந்து போகிறார்கள்
உதடுகளுக்குள் சிரித்துக்கொண்டு
அவர்கள் மொழியில் ஏதேனும்
பெயரும் வைத்திருக்கலாம் எனக்காக

ஒரு வேறுபாட்டைச்
சொல்லித்தான் ஆக வேண்டும்..
முன்பெல்லாம் கவிதைகளை
எடுத்தாண்டு பெருமித்தேன்..
உனக்காக..
இப்போதெல்லாம் எழுத்தாளினும்
பெருமிப்பதேயில்லை...
நீயின்றி!

#முனியாண்டி_ராஜ்.

நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...