Friday, May 13, 2016

மனிதம்


உடைந்த குரலில்
உதவி கோரிக்கொண்டிருந்தது
அந்த உயிர்
கூடி நின்ற திறன்பேசிகள்
முகநூல்களுக்கு நேரலை...
செய்து கொண்டிருந்தன விருப்புகளுக்கு..
ஆம்புலன்ஸ் வரும் வரை தொடாதிங்க..
அக்கறையாய் எச்சரித்தார்
மனிதம் அணிந்த மிருகர்

குருதி நனைத்த தோழமையை
வாய் கௌவி இழுத்துக் கொண்டிருந்தது
கண்ணீருடன் ....
மிருகம் அணிந்த மனிதம்
மறுமுனையில்!!

*முனியாண்டி ராஜ்.*

ஊடல்


இறுகிய அந்த இரவினில்
ஜன்னலைத் தாண்டி
அறைக்குள் பெய்து கொண்டிருந்தது
அந்த ஊமை மழை
எதிரெதிர் திசைகளில் பார்வைகளைப் ...
பதித்துவிட்டு
கோபங்களை மட்டுமே
மென்று கொண்டிருந்தோம்

நாம் உடைத்து வீசிய
வார்த்தைகள்
கட்டிலைச் சுற்றியும் சிதறிக் கிடந்தன
கூட்டிப் பெருக்க மனமின்றி
நீயும்
எடுத்துக் கோர்க்க விருப்பமின்றி
நானும்
ஒரு தலைகனத்துக்குள்
மனதைச் செருகியிருந்தோம்..

எட்டி எட்டி
எதையோ கூற வந்த
துண்டு நிலாவும்...
அப்படியே முகம் புதைத்து மறைந்தது
இருட்டு மேகத்துள்...

ஏதோ முனகியபடி !!

*முனியாண்டி ராஜ்.*

Wednesday, April 6, 2016

வெறுமையும் மௌனமும்


எந்தப் பார்வைக்கும் பதிலின்றி
வெறுமையிலேயே வேக வைக்கிறாய்
வீசும் வார்த்தையைவிட
விழி சுரக்கும் மௌனங்கள் கொடிது..
இரவின் நீளம் 
நீ இல்லாத போது தெளிவாகிறது
உறங்கும் போது மட்டுமல்ல..
உறக்கம் கெடுக்கவும் நீ கனவாகவே
வருகிறாய்

வலமும் இடமும் புரண்டு
ஆடும் மாடும் எண்ணி...
இறுக இறுக விழி மூடி
நெருங்கும் நினைவுகளை நிர்ப்பந்தமாய்
வெளியேற்றி..
பிடிக்காப் பக்கங்களை
மீண்டும் மீண்டும் திருப்பி ...
உள்ளும் புறமும்
இரவை எட்டி எட்டிப் பார்த்து
ம்ம்ம்ம்....
எப்படி இழுத்தும் ..
..... உன்னைப் போலவே உறக்கமும்
கைகளுக்கு எட்டாமலேயே....

இரவின் மீது வெகுதூரம் நடந்தும்
என்னைக் கொல்வதாக
உன்
மௌனம் மட்டுமே இருக்கிறது..

ஒரு வெறுமையை எனக்குள் நிரப்பிவிட்டு!

**முனியாண்டி ராஜ்.**

Tuesday, April 5, 2016

கருணை


உன்னை 
எந்த 'இஸத்தில்' சேர்ப்பது 
இல்லாதவன்தான் இல்லாமையின்
நுணுக்கம் அறிந்தவன் என்பதிலா...
உயிர்களைத் தாண்டியதே
உண்மையின் கோடுகள் என்பதிலா..
எந்த வட்டத்திற்குள்
உன்னை வைப்பதென்றே அறியாமல்
அவதியுறுகிறேன் நான்.....

சுற்றும் முற்றும் தேடுகிறேன்
ஒளி பீச்சும் காமிராக்களிலோ
தம்படம் எடுக்கும் நவீனங்களிலோ
அரசியல் வண்ணம் கலக்கும்
அருவருப்பு விளம்பரங்களிலோ
முகநூல் சுய பதிவுக்கோ.
எதிலும்
நீ சிக்கியிருப்பதாய்த் தெரியவில்லை..

மானுடங்களை அனாவசியமாக
உதறிச் சென்று விட்டுச் செல்லும்
உன்னைப் பார்த்து
ஆறும் ஐந்தும் சேர்ந்தது
பதினொன்றென்று கணிதம் கூறட்டும்
ஏழாவது அறிவென்று
எந்த அறிவும் கூறிவிடும்..

நெல்லுக்கு இறைத்த நீர்
வாய்க்கால் வழியோடி...
உன் ஒருவனுக்காக
ஊரெல்லாம் பெய்யட்டும்
என்றாவது ஒருநாள் ...

அன்பு மழை!!

**முனியாண்டி ராஜ்.***

வறுமையின் தேடல்கள்


எதைத் தேடுகிறாய்..
வறுமையின் மீந்திருக்கும்
எச்சங்களையா...
மனிதம் விட்டெறிந்த
மிச்சங்களையா....
சகோதரம் என்பது கைகொடுக்க
மட்டுமல்ல..
முதுகும் கொடுக்குமென்பதை
உணர்த்திட வந்தாயா..

குப்பைகளில் நன்றாகத் தேடிப்பார்
குள்ள மனம் படைத்தவன்
பதுங்குமிடமாகவும் இருக்கலாம்..
மனம் கொடுத்து
அவனை மேலேற்றி விடு..
உணவு மட்டுமல்ல வாழ்க்கையென
அவனாவது உணரட்டும்..

குப்பைகளை அள்ளிப்போக
குரலற்றவன் எவனாவது வரலாம்
அதற்குள் தேடி எடுத்துக் கொள்
கொடுப்பதைவிட
வீசுவதில்தான் பலர் சுகமடைவர்
என்பதை உணர்க..
அல்லது உணர்த்துக..

வறுமையின் நிறங்களைக் கூற
உன்னை யாரும் அழைப்பதில்லை..
தூரத்திலிருந்து உன் வறுமைக்கு
நாங்களே
வண்ணம் பூசுகிறோம்..
அதன் பொருள் அறியாமலேயே!!!
நீ உதிர்த்திடினும்
அழுக்குப் படியா கைகளினால்
அலட்சியப்படுத்தியே நடந்திடுவோம்..

உன்னைக் கடக்கும்
மானிடப் பார்வைகளைப் பொருட்படுத்தாதே
அருவருப்புகளை மட்டுமே
அவர்களுக்கு வீசத் தெரியும்...
உன் தேடலைத் தொடர்க..

இறுதி மனிதன் கிடைக்கும்வரை!!

**முனியாண்டி ராஜ்.***

Sunday, April 3, 2016

இத்யாதி...இத்யாதி

இடைவெளிகளுக்குள்
இன்னும் இறுகி இறுகி ...
இளமைக்குத் திரும்புகிறது ...
இத்யாதி ... இத்யாதி .. இத்யாதி..
இனி ஒரு காதல்!

உயரம்

நீ வீசிச் சென்ற வார்த்தைகளை
இறக்கத் தெரியால் 
சுமந்து கொண்ட வருகிறேன்..
இரவின் கரையோரம்!

ஓட்டு

ஓட்டுகளின் வேட்டைகளில்
நாற்காலிகள் மட்டும்
நிர்வாணம் களைகின்றன!

நீயும் நானும்

காட்டுத் தீயாய்
வனமெங்கும் விரிகிறாய்...
விபத்தின் காரணியை
இமைகளுக்குள் ஒளித்துவிட்டு
நீயும் இறங்குகிறாய்
தீயணைக்க!

நீ


கிளைகள் அனைத்தும்
வெட்டி வீசப்பட்ட பின்னும்
வேர்கள் ஒவ்வொன்றிலும் விஷமிட்டும்
உயிர் உருவெடுத்துக் கொண்டே வருகிறது..
அவ்வப்போது துளிர்க்கும் 
கணுக்கல்களில் நீ!

நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...