Tuesday, April 5, 2016

வறுமையின் தேடல்கள்


எதைத் தேடுகிறாய்..
வறுமையின் மீந்திருக்கும்
எச்சங்களையா...
மனிதம் விட்டெறிந்த
மிச்சங்களையா....
சகோதரம் என்பது கைகொடுக்க
மட்டுமல்ல..
முதுகும் கொடுக்குமென்பதை
உணர்த்திட வந்தாயா..

குப்பைகளில் நன்றாகத் தேடிப்பார்
குள்ள மனம் படைத்தவன்
பதுங்குமிடமாகவும் இருக்கலாம்..
மனம் கொடுத்து
அவனை மேலேற்றி விடு..
உணவு மட்டுமல்ல வாழ்க்கையென
அவனாவது உணரட்டும்..

குப்பைகளை அள்ளிப்போக
குரலற்றவன் எவனாவது வரலாம்
அதற்குள் தேடி எடுத்துக் கொள்
கொடுப்பதைவிட
வீசுவதில்தான் பலர் சுகமடைவர்
என்பதை உணர்க..
அல்லது உணர்த்துக..

வறுமையின் நிறங்களைக் கூற
உன்னை யாரும் அழைப்பதில்லை..
தூரத்திலிருந்து உன் வறுமைக்கு
நாங்களே
வண்ணம் பூசுகிறோம்..
அதன் பொருள் அறியாமலேயே!!!
நீ உதிர்த்திடினும்
அழுக்குப் படியா கைகளினால்
அலட்சியப்படுத்தியே நடந்திடுவோம்..

உன்னைக் கடக்கும்
மானிடப் பார்வைகளைப் பொருட்படுத்தாதே
அருவருப்புகளை மட்டுமே
அவர்களுக்கு வீசத் தெரியும்...
உன் தேடலைத் தொடர்க..

இறுதி மனிதன் கிடைக்கும்வரை!!

**முனியாண்டி ராஜ்.***

No comments:

Post a Comment