Wednesday, October 19, 2016

தண்டவாளங்கள் ...


தண்டவாளங்கள் ...
===•••===•••===••
எந்தவித இரைச்சலுமின்றி
தண்டவாளங்களுக்குள் ஊர்ந்துசென்று
காணாமல் போனது அது...
உன்
ஒரு கையசைவுக்காக காத்திருந்து
விரல்கள் தானாகவே ஒடுங்கின
சுற்றிச் சுழன்ற பார்வைகளில்
அசைத்த கைகளை
இன்னும் இறக்காமலும்
முகத்தின் புன்னகைகளைக் கழற்றாமலும்
ஒவ்வொருவராக
நிலையத்திலிருந்து நழுவிக்கொண்டிருந்தனர்
பிரிந்து கொண்டே இரயிலை நகர்த்திய
தண்டவாளங்கள்
ஒரு பிரிவின் விளிம்புகளைக்
கூறியபடியே நீண்டு கொண்டிருந்தன
வெப்பத்தோடு நுழைந்த நிலா
எதையோ கூறவரும் நேரம்..
நீள்இருக்கைகளைத் தவிர
காலியாக இருந்தது இரயில் நிலையம்!

#முனியாண்டி_ராஜ்.

தலைப்பில்லாத் தலைகள்...




தலைப்பில்லாத் தலைகள்...
===•••===•••===•••===••
எனக்கான உருவங்களை
அவர்களே வரைந்திருந்தார்கள்..
விரும்பிய வண்ணங்களில்
என்ன அழகுப்படுத்தி ஆரவாரித்திருந்தார்கள்
தங்கள் வண்ணங்களை
இன்னொருவர் மேல் பூசிவிட்ட பூரிப்பில்
எக்காளச் சிரிப்புகளைத்
தங்களுக்குள் பரிமாறிக் கொண்டார்கள்
ஒவ்வொரு மனதிலும் நாறிய குப்பைகளை
மற்றொருவர்மேல் ஏற்றிவிட்ட ஆணவம்
நடைகளில் நாடகமாடியது
விரல்மாற்றியோ கைமாற்றியோ
எழுதி ஏமாற்றியதில்
தங்கள் கெட்டிக்காரத்தனத்தைத்
தாங்களாகவே புகழ்ந்து கொண்டார்கள்
மனதின் வக்கிரங்களில்
மிருகங்கள் தாராளமாகவே வெளியேறின
பெயர் மறைத்து
ஏதோ ஒரு பொய்ம்மைக்குள் ஒளிந்து
முகமின்றி உலாவிய அதை
அவ்வளவு சீக்கரம்
நிராகரிக்க முடியவில்லை..
மொட்டைக் கடிதமென்று!

#முனியாண்டி_ராஜ்.

பிரிவுகளுக்கு முன்...


பிரிவுகளுக்கு முன்...
===•••===•••===•••
உறக்கத்தில் தள்ளிவிட முயன்ற
இரவின் நீண்ட முயற்சிகளில்
நீ இழுபறியாகவே இருக்கிறாய்
இமைகளுக்குள் அமர்ந்துகொண்டு!
ஒரு பெரும் மழைக்குப் பின்
ஓய்ந்ததுபோல் தலையணைக்கருகில்
கைப்பேசி....
தகவல் பரிமாற்றத்தில்
உன் விரல்கள் சற்று ஓய்ந்திருக்கலாம்
குரல்பதிவு தகவல்களில்
நீ ஆர்வம் குன்றியும் போயிருக்கலாம்
வடிவேல்களிலும் விவேக்குகளிலும்
நீ தாக்கியப் படத்தகவல்களில்
கொஞ்சம் உருக்குலைந்துதான் போயிருக்கிறேன்..
கைப்பேசியை முடக்கிவிட முயலும்
ஒவ்வொரு கணங்களிலும்
நீ புன்னகையோடு விரல்களோரம்
நடை பயில்கிறாய்....
உன் கோபங்களைக் கொட்டித்தீர்த்த
களைப்பில்
உன் திறன்பேசி உறங்கியிருப்பதை
அழைப்புகளின் நிராகரிப்புகள் அறிவிக்கின்றன..
சுற்றியிருக்கும் சுற்றங்களில்
உன் மூளை சலவை செய்யப்பட்டு
அழுக்காகாதவரை...
இது அப்படியொன்றும் புதிய கதையல்ல
விசனப்பட!!

#முனியாண்டி_ராஜ்.

குறிஞ்சி


கொஞ்சம் கவிதைகளும் நிறைய கனவுகளும்


கொஞ்சம் கவிதைகளும் நிறைய கனவுகளும்
===•••===•••===•••==•••===•••===••
சுடுமணலில் பாதம் கொப்புளிக்க
நாவறண்டு நீர்தேடிய விழிகளில்
கானல்நீராய் கடந்தபோன மணல்திட்டுகள்போல்
கதிரின் கொடுமையில் கால்கள் அல்லாட
நிழல்நாடும் ஒரு நெடும்பயணத்தில்
மேகநிழல்களில் தொலைந்த
களைத்த ஓர்வழிபோக்கன்போல்
மௌனவில்லொடிக்க இராமனாய்
உன் வாசல்வரும் போதெல்லாம்
கானல்நீராய் போகிறேன்
நீ வீசும் அலட்சிப்பார்வைகளில்
சாளரங்களில் திடீரென
கடந்துநகரும் உன்நிழல்களில்
நானும் கொஞ்சம் களைப்பாற முயல்கையில்
படாரென அறைந்துமூடும்
வல்லோசையில் அதிர்ந்து களைகின்றன
நான் சுமந்துவந்த அத்துணைக் கவிதைகளும்
கொஞ்சம் கனவுகளும்..
இன்னும்
பல பாலைகளைக் கடக்க வேண்டுமெனில்
மீண்டும் மீண்டும் நான் அவதரிப்பேன்
உன் சாளர ஓரங்களில்
கொஞ்சம் கவிதைகளுடனும்..
நிறைய கற்பனைகளுடனும்!

#முனியாண்டி_ராஜ்.

போரின் மெல்லிய இடைவெளிகளில் ...



போரின் மெல்லிய இடைவெளிகளில் ...
===•••===•••===•••==•••===•••==
கொழுத்த அரபுக்குதிரையின் முதுகில்
பிட்டம் அழுத்தி 
திசையெங்கும் மேய்ந்தன அவன்விழிகள்
கனத்தஅவன் மௌனத்தின்
பொருள்புரியாது விழித்துக் கொண்டிருந்தது
அப்புரவி
தடித்த அவன் கட்டளைக்காக
காத்துக்கிடந்தன வேட்டைப் படைகள்
குருதிக்கரை இன்னும் மறையாத
வாளினை ஒருகணம் உருவி
மீண்டும் உறையில் செலுத்தினான்
விழிகள் வீசிய தூரங்களில்
எதிராளி யாருமிருப்பதாய் தெரியவில்லை
தனக்குள் தவிர..
ஒருதடவை மேலும்கீழும்
தன்னையே பார்த்துக் கொண்டான்
வீசிய வாளால்
வாழைத்தண்டாய் சரிந்த அவள்தேகம்
ஒருமுறை கண்முன் வந்துமறைய
தன்படைகளை நோக்கினான்
குருதிசுமந்த வாள்களின் வாடையில்
சடாரெனத் திரும்பிக் கொண்டான்
ஒருபெருத்த மௌனத்தை
அரபுக்குதிரை கர்ஜித்துக் கலைத்தது
மீண்டும் அவளே கண்முன் வந்தாள்
ஏதோ ஒன்றை நோக்கி
...அவள்கரங்கள் நகர்வதுபோல்
...அவள்கால்கள் மணலைக்கிழிப்பதுபோல்
...பார்வை யாரையோ வேண்டுவதுபோல்
...சில வார்த்தைகளை அவள்உதடுகள்
மீண்டும் மீண்டும் உச்சரிக்க .......
படைகள் சிலையாய்ச் சமைய
விர்ரெனத் திரும்பிய அந்த அரபுப்புரவி
ஒரு பாலைவனப்புயலை எழுப்பிவிட்டுப்
பறக்கத் தொடங்கியது..

#முனியாண்டி_ராஜ்.

ஹைக்கூ 05


நீண்டு கொண்டே
நகரும் இரவு
இமைகளில் அவள்




படைப்பு


1234



கிளைகள் அனைத்தும்
வெட்டி வீசப்பட்ட பின்னும்
வேர்கள் ஒவ்வொன்றிலும் விஷமிட்டும்
உயிர் உருவெடுத்துக் கொண்டே வருகிறது..
அவ்வப்போது துளிர்க்கும் 
கணுக்கல்களில் நீ!

#முனியாண்டி_ராஜ்.

ஓசையில்லா குரைப்பில்

அதன் மொழியில்
எனக்குப் பேசத் தெரியவில்லை..
இருகால்தூக்கி வாலாட்டி
நாவால் நக்கி
ஓசையில்லா குரைப்பில்
ஏதோ சொல்லும் தருணம்..
அதன்மொழி புரியாமல்
ஒருபுன்னகையில் தடவிவிட்டு மட்டுமே
செல்ல முடிகிறது..
வாசலில் படுத்துருண்டு
இரவெல்லாம் பாதைகள் பார்த்து
திடீரென எழும் அரவங்களில்
இறுக்க உணர்வுகளில் விரைகையில்
'நானிருக்கிறேன் போய்ப்படு' என்பதுபோல்
வாலாட்டிக் கூறுகையில்...
மனிதர்களின் மொழி மரித்தே போகிறது
பல சமயங்களில்!




நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன இரவு முழுவதும் சுமந்து கொண்டு இந்தக் காலையில் உன் வாசல்முன் விழிக்கிறேன் இரவுகள் நான் ...