Thursday, November 10, 2016

இருப்பில் இன்னும் கொஞ்சம்


இருப்பில் இன்னும் கொஞ்சம்
===•••===•••===•••===•••
என் தோட்டம் நோக்கி
மீண்டும் நடக்கிறேன்
செம்மண் மரித்து தாரணிந்த சாலைகள்
ஓர் அன்னியனாய் ....
துண்டாக்கப்பட்ட பிறகு
தோட்டப்புறம் நோக்கிச் செல்லும்
பாதை ஒவ்வொன்றும்
என் பாதைகளை
ஏற்க மறுத்தே செல்கின்றன..
கொச்சை வார்த்தைகளாயினும்
தமிழ் செழித்த லயங்கள்
வங்காளதேசிகளும் நேப்பாளிகளும்
இந்தோனேசியர்களுமாய்...
அனைத்துலக மொழியில் பேசுகின்றன
ஒரு தீபத்திற்காக
கோவில்கள் தவம் கிடக்கின்றன
கால் நீவும் காளிமுத்துத் தாத்தாவாவும்
மூலிகை சொல்லும் முனியம்மா பாட்டியும்
ஏதோ ஒரு மரத்தின்கீழ்
அமர்ந்திருப்பதாகவே உணர்கிறேன்..
பேயென்று பயமுறுத்திய ஆலமரமும்
பேடியென ஒண்டிப் போய் நிற்கிறது
திருவிழாக்களை எதிர்பார்த்து
என்னைப் போலவே
ஏங்கி நிற்கின்றன ஒவ்வொரு
விளக்குத் தூண்களும்..
சில்லாய் சிதறிய இளவட்ட நட்புகள்
இன்னும் மகிழ்ந்திருக்கின்றனர்
அவ்வப்போது துளிர்க்கும் ஓரிரு நினைவுகளுடன்
புலனக்குழுக்களில்
இன்னும் தோட்டப்புற நினைவுகள் ஏந்தி!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment