Thursday, November 10, 2016

சொல்லாமல் போனவை


சொல்லாமல் போனவை
===•••===•••===•••==
நான் சொல்லாமல் போன விடயங்களில்
இதுவும் இருக்கலாம்..

கார்கால மாலை ஒன்றில்
ஒரு குடையில் செல்லவேண்டிய கனவில்
உன் குடை களவு போனது
பின்
மழை பொய்த்தது வேறு
என் நகங்களில் நானே காயமுற்று
உன் கைக்குட்டைகளில் நனைந்தது...
மெதுவோட்டங்களில்
சாளர விழிகளில் பதுங்கி வந்து
காணாமல் போன கவிதைகளை
உன் கண்களில் தேடி அலைந்தது..
திரைகட்டிய திருவிழா சினிமாவில்
இடம் தேடித்தேடி நொந்ததுபோல்
ஈரப்புல்லில் பிட்டம் நனைந்து அமர்ந்தது
உன் வாசல் வரும்போதெல்லாம்
காற்றிழந்த மிதிவண்டியை வைவதுபோல்
உன்னை வரித்துக் கொண்டே போனது
அறிந்த பாடத்தையும் அறியாதவனாய்
அப்பாவியாய் உன் கதவு தட்டியது
தாமதமெனத் தெரிந்தும் தெரியாமல்
வகுப்பறை நுழைந்து
உன் கவனம் திருடத் துணிந்தது..
இதுபோல் இன்னும்..
இறுதியாய்
நீ கல்யாணச்செய்தி சொல்லியும்
என்னை நானே மாய்த்துக் கொண்டு
துணிவற்றுச் சரிந்தது....

இப்படி
நான் சொல்லாமல் போன விடயங்களில்
இதுவும் இருக்கலாம்....
இன்னும் நீ
என்னுள் வாழ்ந்து கொண்டிருப்பது!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment