Monday, November 14, 2016

தமிழன்பன் விருது


ஈரோடு தமிழன்பன் விருதுக்கு என்னை தேர்வு செய்த அமிர்த கணேசன் ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

இது_மரணமல்ல ...


#இது_மரணமல்ல ...
===•••===•••===•••
நம்பிக்கையின் கடைசித்துளியாய்
ஒட்டியிருக்கிறது
இன்னும் கொஞ்சம் உயிர்
ஓர் அடர்ந்த மழையின் எச்சங்களென
அவ்வளவு எளிதில்
நீங்கள் தூக்கி வீசவும் முடியாது
கதிரவனின் வன்கதிர்கள் தின்ற
மீதமெனவும்
நீங்கள் நிராகரிக்க முடியாது
ஒவ்வொரு மழைக்கும் பின்னும்
ஒவ்வொரு அதிகாலைக்குப் பின்னும்
இந்தக் கடைசித் துளிகள்
ஒரு மெல்லிய துணிச்சலை
எரிய விட்டுக் கொண்டே வருகிறது
எங்கள் உதிரங்களில்..
உதிர்ந்த விழுந்த துளிகள்
சிற்றிலைகள் தாங்கும் விருட்சங்களுக்கு
உரமாகவேதான் விழுகின்றன...
உயிரின் கடைசிப் பயணமல்ல
இந்தத் துளி!

#முனியாண்டி_ராஜ்.

நீ

எல்லோரும் என் கவிதைகளைக்
கடந்தே போகிறார்கள்
நீ மட்டும்தான்
அதில் நடந்து போகிறாய்..

#முனியாண்டி_ராஜ்.

Thursday, November 10, 2016

வருகை


அவள் எப்போதாவதுதான் வருவாள்
அதன் நேரமோ பொழுதோ
உறுதியற்ற நிலையிலேயே இருக்கும்
பெரும்பாலும்
ஏதோ ஒரு இறுக்கத்திலும் கனத்தலிலும்
மனம் எங்கேயாவது மௌனித்திருக்கும்..
அவசரகதிகளில் 
உடலின் அத்துணை அணுக்களிலிலும்
வன்மம் ஏதேனும் துளிர்க்கும் பொழுதுகளில்
வருடியாய் இருப்பதேயில்லை அவள்
அசதிகளில் சட்டெனச் சாய்ந்து
உறங்கங்களில் கரைந்துவிடும் நேரங்களிலும் 
சரி ...
நேரம் துரத்திய விடியலில் விழிக்கும்போதும் சரி .....
அவள் வருவதேயில்லை..
கட்டங்கட்டமாக மனிதரோடு மனிதராய்
தொலையும் தருணங்களில்
எங்கோ ஒரு பாறையின் உச்சியில்
இருப்பதுபோல்...
பார்வைகளைப் பதித்துவிட்டு
உதடறியா ஒரு சிறுபுன்னகையுடன்
மறைந்தே போகிறாள்!



உயிர்பெறும் வடுக்கள் ...


உயிர்பெறும் வடுக்கள் ...
===•••===•••===•••==
வழக்கம் போலவே
மண்டையில் கொட்டிவிட்டுச் செல்கிறது
இந்த ஐப்பசியின் ஒருநாள்
விசையுந்திலிருந்து
உன்னைத் தூக்கியெறிந்துவிட்டு
தள்ளிப்போய் நின்றது அந்தக் கனவுந்து
இரத்த வெள்ளத்தில் நீயும்
கண்ணீர் வெள்ளத்தில் நானும்!
திடீரென வறண்டுபோனது
தொண்டை மட்டுமல்ல..!!!
சிலைபோல் நின்றவனை
யாராவது உசுப்பி விட்டிருக்க வேண்டும்
சுற்றியிருந்த கூட்டத்தில்
வேற்றுக்கிரகவாசியாய் வேறான பிறகு
என்ன செய்ய..!!
சுற்றியிருந்த நாளிதழ்களால்
உன் முகத்தை மூடிவிட்டு
நீ
இறந்து விட்டதாய் உறுதி செய்திருந்தார்கள்
யாரோ.......
கவான்?* ... என்ற வார்த்தைகள்
உடலை மட்டுமல்ல
உயிரையும் உலுக்கிச் சென்றன...
அவசர ஊர்தியில்
நீ கொண்டு செல்லப்படும்போது
நான் மட்டும் அப்படியே..!
கூட்டம் கலைந்த பின்னும்
தனித்த ஒருவனாய்
அந்தப் பகலும்
இரவில் கரைந்து போகும்வரை......!!!

வழக்கம்போலவே
தலையில் கொட்டிவிட்டுப் போகிறது
இந்த ஐப்பசிகளில் ஒருநாள்
கையாலாகாதவனுக்காக....!!

(*கவான் - நண்பன்)

#முனியாண்டி_ராஜ்.

விருது


தூண்டில்

ஒவ்வொரு தூண்டிலிலும்
புழுவாய் நெளிந்து கொண்டிருந்தன அவை..
ஆசையில் பட்டெனக் கௌவும் மீனாய்
அவர்கள்தாம் வரித்து வைத்திருந்தார்கள்
என்னை ..
விற்பனை முகவர்களின் புழுக்களில்
நீந்திநழுவிச் செல்லும் போதும்
கைப்பேசிகளில் கழுத்தறுபட்டு
அழுகின்றன அழைப்புகள்..
நிராகரிக்கத் திணறும் தருணங்களில்
மூளையும் சலவை செய்யப்படும்
மறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்
துணிவுடன் மன்னிக்கவும் என்று!

#முனியாண்டி_ராஜ்.

இருப்பில் இன்னும் கொஞ்சம்


இருப்பில் இன்னும் கொஞ்சம்
===•••===•••===•••===•••
என் தோட்டம் நோக்கி
மீண்டும் நடக்கிறேன்
செம்மண் மரித்து தாரணிந்த சாலைகள்
ஓர் அன்னியனாய் ....
துண்டாக்கப்பட்ட பிறகு
தோட்டப்புறம் நோக்கிச் செல்லும்
பாதை ஒவ்வொன்றும்
என் பாதைகளை
ஏற்க மறுத்தே செல்கின்றன..
கொச்சை வார்த்தைகளாயினும்
தமிழ் செழித்த லயங்கள்
வங்காளதேசிகளும் நேப்பாளிகளும்
இந்தோனேசியர்களுமாய்...
அனைத்துலக மொழியில் பேசுகின்றன
ஒரு தீபத்திற்காக
கோவில்கள் தவம் கிடக்கின்றன
கால் நீவும் காளிமுத்துத் தாத்தாவாவும்
மூலிகை சொல்லும் முனியம்மா பாட்டியும்
ஏதோ ஒரு மரத்தின்கீழ்
அமர்ந்திருப்பதாகவே உணர்கிறேன்..
பேயென்று பயமுறுத்திய ஆலமரமும்
பேடியென ஒண்டிப் போய் நிற்கிறது
திருவிழாக்களை எதிர்பார்த்து
என்னைப் போலவே
ஏங்கி நிற்கின்றன ஒவ்வொரு
விளக்குத் தூண்களும்..
சில்லாய் சிதறிய இளவட்ட நட்புகள்
இன்னும் மகிழ்ந்திருக்கின்றனர்
அவ்வப்போது துளிர்க்கும் ஓரிரு நினைவுகளுடன்
புலனக்குழுக்களில்
இன்னும் தோட்டப்புற நினைவுகள் ஏந்தி!

#முனியாண்டி_ராஜ்.

விதை001


அவள்
தொட்டுச் செல்லும் இடங்களிலெல்லாம் 
என்னை
விட்டுச் செல்கிறாள்
கடந்து செல்லும் இடங்களிலோ
என்னைக் கடத்தியே செல்கிறாள்
தூவலிழந்த விரல்கள் போல்
இடம்தேடி அலைய விடுகிறாள்!



#இரயில்_சிநேகம்


#இரயில்_சிநேகம்
===•••===•••==
யாருமற்ற அந்தப்பெட்டியில்
நம்மோடு சேர்ந்தே வந்திருந்தன
அந்தப் புத்தகங்கள்..
மார்போடு அணைத்து எடுத்துப் படித்து..
ஒவ்வொரு அசைவிலும் நான்
தாள்களை மட்டுமே புரட்டிக் கொண்டிருந்தேன்..
புத்தகங்கள் உனக்குக் கொஞ்சம்
வலியைக் கொடுத்திருக்கலாம்
சிறுபுன்னகையோடு என் விலாசம்
நாடி வந்தாய்
அறிமுகங்களுக்குள் விரல்கள் மாறின...
புத்தகங்கள் ஓர் ஓரமாய் அமர்ந்து
நம்மையே கவனிக்கலாயின..
பிறப்பு இறப்பு வேலை வெட்டி
தோட்டம் பள்ளி கல்லூரி
நண்பர்கள் எதிரிகள் ஏமாளிகள்
ஏமாற்றியது ஏமாந்தது..
ம்ம்ம்.. இன்னும் இன்னும்
பயணம் முடியாத ஒரு தூரத்தில்
நீயும் இறங்கிக் கொண்டாய்..
ஒரு இரயில் சிநேகத்தின்
பொருளைக் கற்பித்துவிட்டு!

#முனியாண்டி_ராஜ்.

ஒப்பீட்டில் நீ இல்லாமல்.


ஒப்பீட்டில் நீ இல்லாமல்..
===•••===•••===•••==
இத்துடன் என் தேடலை
நிறுத்தலாம் என நினைக்கிறேன்
ஒரு மழையில் காணாமல் போன
உன் விரல்களின் பதிவைத் தேடி
எத்தனை மழைகளில் நான் நனைவது
பாவமோ பரிதாபமோ
என் நனைதலின் கரிசனைக்கு
நீட்டப்படும் குடைகள் ஒவ்வொன்றையும்
நிராகரித்தே செல்கிறேன்
அதன் நிறம்
.....மஞ்சளோ சிவப்போ கறுப்போ
எதுவானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்
வெறும் கம்பிகளாய் சிதைந்திருக்கும்
இந்தக் குடைக்குள் ஒளிந்திருக்கும்
காதலின் ஒப்பீட்டில் ..
இன்னும் நிராதரவாய்!

#முனியாண்டி_ராஜ்.

தமிழன்பன் விருது


சொல்லாமல் போனவை


சொல்லாமல் போனவை
===•••===•••===•••==
நான் சொல்லாமல் போன விடயங்களில்
இதுவும் இருக்கலாம்..

கார்கால மாலை ஒன்றில்
ஒரு குடையில் செல்லவேண்டிய கனவில்
உன் குடை களவு போனது
பின்
மழை பொய்த்தது வேறு
என் நகங்களில் நானே காயமுற்று
உன் கைக்குட்டைகளில் நனைந்தது...
மெதுவோட்டங்களில்
சாளர விழிகளில் பதுங்கி வந்து
காணாமல் போன கவிதைகளை
உன் கண்களில் தேடி அலைந்தது..
திரைகட்டிய திருவிழா சினிமாவில்
இடம் தேடித்தேடி நொந்ததுபோல்
ஈரப்புல்லில் பிட்டம் நனைந்து அமர்ந்தது
உன் வாசல் வரும்போதெல்லாம்
காற்றிழந்த மிதிவண்டியை வைவதுபோல்
உன்னை வரித்துக் கொண்டே போனது
அறிந்த பாடத்தையும் அறியாதவனாய்
அப்பாவியாய் உன் கதவு தட்டியது
தாமதமெனத் தெரிந்தும் தெரியாமல்
வகுப்பறை நுழைந்து
உன் கவனம் திருடத் துணிந்தது..
இதுபோல் இன்னும்..
இறுதியாய்
நீ கல்யாணச்செய்தி சொல்லியும்
என்னை நானே மாய்த்துக் கொண்டு
துணிவற்றுச் சரிந்தது....

இப்படி
நான் சொல்லாமல் போன விடயங்களில்
இதுவும் இருக்கலாம்....
இன்னும் நீ
என்னுள் வாழ்ந்து கொண்டிருப்பது!

#முனியாண்டி_ராஜ்.

குறட்டை


அவன்
மோசமான ஓட்டுநர்
பழங்காலத் தொடரி தொடங்கி
இக்காலச் சுழலூர்தி வரை
பிரமாதமாக ஓட்டக்கூடியவன்..
சில சமயங்களில்
காட்டு விலங்குகளையும்
அவற்றின் குரல் தெறிக்க
ஓட்டி வருபவன்..
நம்பாவிட்டால்...
என்னைப் போல்
தூக்கம் கலைந்தவர்களைக்
கேட்டுப் பாருங்கள்..

#முனியாண்டி_ராஜ்.
8/7/2016



முழுமை பெறாமலேயே...
===•••===•••===•••===
முழுமை பெறாத ஏதோவொன்று
இந்தத் திருகு வெட்டுப்புதிரில்
விடுபட்டது போலவே உள்ளது
பல சாலை வளைவுகளிலும்
முக்கோண நாற்கோணச் சந்திப்புகளிலும்
கடந்து போகும் எந்த முகமும்
இதில்
பொருந்தாமலேயே கனவைக் கொல்கிறது
ஒரு முதல் தொடுதலில்
சட்டென விரலிழுத்ததில்
கண்ணின் ஓரம்வழிந்த
அந்த ஒருதுளி நாணத்தின் சாரலா
கவிதையென நாலுவரிக் கிறுக்கலில்
உன் மௌனத்தை ஒளித்த
அந்தக் கடைசி வினாடிகளின் சலனங்களா
ஒரு கடிதம் கொடுக்கவும்
விரல்முதல் விழிவரை வியர்த்திருந்த
அந்தத் துளிகளில் ஏதேனும் ஒன்றா..
அவசர அவசரமாக எதையோ கூற
ஓடிவந்து...
படிக்கட்டுகளில் பதுங்கிக் கொண்டாயே..
பிறந்த நாள் வாழ்த்துகள் எனும்
சொற்கள்கூட பாதியில் மறைந்தே அதுவா..
அதில் ஏதேனும்..
உன் விழிகளோரம் ஓடியோடி அலைந்த
எனது நிழல்களின் எச்சங்களாக கூட..
உன் முகவரி தேடி களைத்தாகிவிட்டது
கூகுளும் அலசி ஓய்ந்து விட்டது
அந்த ஒரு வெட்டுத்துண்டுக்காக
என் திருகுவெட்டுப் புதிர்
இன்னும்
பூர்த்தியாகாமலேயே போகிறது...

#முனியாண்டி_ராஜ்.

தலைப்பில்லாத தலைகள்