Wednesday, May 6, 2020

நேற்றுக் கொஞ்சம் பொழுதுகள் மீதமிருந்தன
இரவு முழுவதும் சுமந்து கொண்டு
இந்தக் காலையில்
உன் வாசல்முன் விழிக்கிறேன்
இரவுகள் நான் சுமந்த கனத்தின் எடை
உன்
பிடிவாதத்தின் அளவில் பாதியிருந்தது
மௌனத்தைவிட உயிரைப் பிழிந்தது
புரிதலைவிட கொஞ்சமாக வறண்டிருந்தது
நீ பிய்த்தெறிந்த பொழுதுகள்
மீதப்பட்ட விந்தையைத் திரை விலக்கிய
கண்ணாடி வழியே ஒளிந்து பார்க்கிறாய்
இங்கேயே இறக்கிவிட்டுப் போய் விடலாம்தான்
என் மரணத்தைவிட உன் கனம் பெரிதென
அப்போதும் நீ உணர மாட்டாய்

Sunday, June 25, 2017

சூரியன் மேயும் சமவெளிகள்

அன்புசால் நண்பர்களே,


என் முதல் கவிதைத் தொகுப்பான சூரியன் மேயும் சமவெளிகள் என்னும் கவிதைத் தொகுப்பு வரும்

27.07.2017 சனிக்கிழமை,
கோலாலம்பூர் டான்சிரி சோமா, துன் சம்பந்தன் அரங்கத்தில்
பிற்பகல் 1.00 மணி 

தொடங்கி நடைபெறும் என்பதனை இதன்வழி தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, தமிழ் ஆர்வலர்கள் தவறாது இந்நிகழ்வில் கலந்து ஆதரவு தருமாறு அன்புடன் விழைகிறேன்.

நன்றி.

Saturday, May 6, 2017

தொலைதல்


அவனின் நிறம்


அவனின் நிறம்
===•••===•••
சரிந்த விழுந்திருந்த தேகங்களிலும்
ஆறாய் பெருகிப் பாய்ந்திருந்த
குருதிகளிலும்
எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள்
இரத்தம் தோய்ந்த
கட்டைகள் ஏந்திய கைகளும்
சகதியில் விழுந்து கிடந்தன

வெவ்வேறான சின்னங்களில்
போர்த்திக் கொண்டவர்கள்தான்
நான்கு திசைகளிலிருந்தும்
மையம் நோக்கி
நகர்ந்து கொண்டிருந்தார்கள்
பசிக்கான வேட்டைகளில்

எரிக்கப்பட்ட குடிசைகளும்
எரியூட்டப்பட்ட மனிதங்களும்
இரவுகள் மட்டுமன்றி
பகல்களையும் ஒளிர்விக்கத் தவறியதால்
வாகனங்கள் கொழுத்தியும்
தேடல்களைத் துரிதமாக்கினர்

வேறுபட்ட மந்திரங்களில்
தங்கள் தந்திரங்கள் மறைத்தே
வேத நூல்களென சிரம் வைத்தே
தேடிக் கொண்டே இருந்தார்கள்
தீவிரத்தில் எதையோ
தங்களுக்கான நிறங்களை!

மனித வாடையே மீந்திருந்த
அந்தக் காட்டுக்குள்
மதமற்ற மிருகங்களோடு
சிரித்துப் பேசிய படியே
நடந்து கொண்டிருந்தான்...

நிறமற்ற அவன்!

Wednesday, April 26, 2017

நிறங்கள் மங்கிய ஓவியங்களில்..



வருடங்கள் மறந்த
ஒரு பேருந்து பயணத்தில்
சில கவிதைகளுடன் நீ
அருகருகே இருக்கைகளில் ஏதோ ஒன்றை
முணுமுணுத்தபடி நெஞ்சில் சாய்ந்து
அண்ணாந்து பார்க்கிறாய்
கண்களுக்குள் நுழைந்து
இதயம் விதானங்களில்
ஓவியங்கள் வரைந்தவாறே...
என்னைக் கடந்து ஓடும் இருள்கவிழ்ந்த மரங்களிலும் செடிகளிலும்
முடிவு பெறாத தேடல்களில்
மனம் மௌனித்துப் பயணிக்கிறது
இருள்கவிழ்ந்து கிடக்கிறது
உள்ளும் புறமும்!

குளிரை ஆவேசமாய்த் துப்பும்
பேருந்தின் சீற்றத்தில்
பக்கத்திருக்கை அரமற்று கிடக்கிறது
சில வார்த்தைகளை உதிர்க்க முயன்று
உதடுகளுக்குள் ஒளித்துக் கிடக்கிறேன்
நீ முணுமுணுத்த வார்த்தைகளைப்
இருக்கைகள் எங்கும் தேடுகிறேன்
இன்றும் கடந்தோடுகின்றன
இரவுகள் அணிந்த மலைகளும் மரங்களும்
என் பார்வைகள் பொருட்டன்றி!

நிறம் மங்கினும்
நீ வரைந்த ஓவியங்கள் மட்டும்
இதய விதானங்களில்..
எதையோ கூற முயன்று!

Monday, April 17, 2017

புத்தாண்டு பலன்

குரு மூன்றாம் வீடும்
சனி ஏழாம் வீடும்
கேது எட்டாம் வீடும்
மாறியதில்
திருமணம் தள்ளிப்போனது இவ்வாண்டும்!
அதற்கென்ன
வருடத்தில் நான்குமுறை வரும்
புத்தாண்டுகளில்....
போனவர்கள்
திரும்பி வராமலா போவார்கள்!

சூரியன் மேயும் சமவெளிகள்

சூரியன் மேயும் சமவெளிகள்
===•••===•••===•••===
சூரியன் மேயும்
இந்தச் சமவெளிகளுள்
எதிர்காலங்களைக் கேள்விக்குறியாக்கவே
வந்து ஜனித்தாயோ மகளே
என் இறந்த காலங்களை
வருடங்கள் மீட்டுக் கொடுக்கும் ஏற்பாடுகளில்
நீ எப்படி விழுந்தாய்..
என் வழிகள் யாவும் அடைக்கப்பட்ட பின்னும்
எவ்வழியில் உன்னை நான்
கரையேற்றுவது..

எனது பாவங்களின் சாபமா
அல்ல
உன் சாபங்களின் கண்ணீரா இது..
எதுவெனத் தெரியாமலேயே
இருள் அடர்ந்த ஒரு வெளியில்
புதைந்து கொண்டே வருகிறேன்
உன்னையும் சுமந்து கொண்டே..
எந்த இறைவனும் கண்ணுக்குத் தெரியா
மனிதம் அற்ற முகங்களில்
உனக்காவது ஒருவனைத் தேடுகிறேன்..
என் சுமையல்ல கண்ணே நீ
உன் சுமையாகவே நான் !!!!

என்னைக் கிழித்தெறிந்த பாதைகளில்
உன்னை எப்படி நடக்க விடுவது
மடி கனத்தும் மனம் மறுதலிக்கிறது..
உன்னை இறக்க..
நானும் இறக்க!
சூரியன் சுட்டு கருத்ததல்ல
நம் தேகம்...
வறுமையின் இன்னொரு பக்கம் இது!
உன் பாதம் பட்டு
பூமியாவது எரியாமலிருக்கட்டும்...

பசி போக்க வெள்ளை மனதுகள்
வரும் வரை ...
கன்னம் கிழிக்கும்
என் கண்ணீரைப் பருகிக் கொள்..
இதையன்றி வேறெதுவுமில்லை
என்னிடம்

அது குருதியாகவே இருந்தாலும்!

#முனியாண்டி_ராஜ்.