ஒற்றைக் கொம்பில் சிறகுகள் மடிந்து
பார்வையைக் கரைத்துக் கொண்டிருந்தது
அந்த வண்ண உயிர்..
கதிரவனின் சினம்
வனமெங்கும் விரிந்திருந்தது..
முகம் வெடித்த கால்வாய்கள்
நீரின்றி நிர்வாணம் காத்தன..
பச்சை வெளுத்த புல்வெளிகள்
ஆங்காங்கே வானம் பார்த்த படி..
பறந்து பறந்து அலைந்த
களைப்பாக இருக்கலாம்..
ஒற்றைக் கொம்பின் அசைவுகளில்
தன்னைச் சுதாகரித்துக் கொண்டிருந்தது
அது..
விழிகளின் ஓரம்
மௌனம் காத்தது மிரட்சி..
கனிம நீரின் மூடியில்
நீரூற்றிச் சற்று நகர்ந்தேன்..
இறக்கைகள் விரிய சர்ரென
இறங்கியது...
நீரின்றி அமையாது உலகம்..
#முனியாண்டி ராஜ்.#
No comments:
Post a Comment