Wednesday, December 30, 2015

மனம் நழுவும் சில பொழுதுகள்



தூரம் தெரியாத ஏதோ ஒரு திசையில் நின்று கொண்டு
கையசைத்துக் கொண்டே இருக்கிறாய்…
காலம் தேய்த்துப் போட்ட
நினைவுகளின் பக்கங்களில்
ஏதோ தட்டுப்போடுவது போல்!

முகநூல்களின் அழைப்புப் பக்கங்களில்
பல தடவை உன்னை நிராகரித்தும்
நீ எப்போதும் போல்
கதவைத் தட்டிக் கொண்டே இருக்கிறாய்…
உனக்கான அழைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை!

மனதிலின்று நீ கழன்று கொண்ட பிறகு
என் விரல்கள்
உன் முகவரிகளைத் தீண்டியதே இல்ல….
உன் பக்கமிருந்து வீசும் காற்றைக் கூட
கவனமாய் விலக்கியிருக்கிறேன்….

ஏதோ ஒரு சந்திப்பில்
நமது பார்வைகள் விபத்துக்குள்ளாகலாம்..
அதுவரை..
என்னைக் கவனமாய் பூட்டியே வைத்துக்கொள்கிறேன் !!!

என்னிலிருந்து நானே நழுவும் வரை!!!
…..முனியாண்டி ராஜ்

Tuesday, December 29, 2015

ஆமாம்களின் இல்லைகள்


^^ஆமாம்களின் இல்லைகள்^^

ஆமாம் என்பவை எல்லாம் 
ஆமாம்களாகவே எப்போதும் இருந்து விடுவதில்லை ..

பல ஆமாம்களில் இல்லைகளும்

பல இல்லைகளில ஆமாம்களும்

மறைந்தும் உறங்கலாம்.....

தேவைக்கேற்ப சில ஆமாம்கள்

காசுக்கேற்ப சில ஆமாம்கள்

பதவிக்கேற்ப சில ஆமாம்கள்

பயத்திற்கேற்ப சில ஆமாம்கள்

எப்படியோ ..

இல்லைகளில் சிக்கும் சில ஆமாம்கள் 

தலையசைத்தலிலாவது தங்கள் ஆமாம்களைப் பதித்து விடுகின்றன.. 


சங்கடங்களில் நெளியும் சில இல்லைகளுக்கு

ஆமாம்கள் மௌனத்தில் விடையளித்து விடுகின்றன..

மௌனம் என்பதும் ஓர் ஆமாம்தான் என்று


எழுதப்படாத அகராதியில் இருக்கிறதாம்…

இல்லைகளைப் பதுக்கும் மௌனங்களைப்போல்

ஆமாம்களைப் பதுக்க முடியவில்லை..

பல வேளைகளில்!!!

                                                 ^^முனியாண்டி ராஜ்^^

Tuesday, December 15, 2015

கண்களின் கைதி

^^கண்களின் கைதி^^
ஏதோ ஒரு திருப்பத்தில்
என் கவனம் கவிழ்ந்திருக்கலாம்..
சில நொடிகளில் பாதைகளை மறந்து
பாதங்கள்  மாறத் தொடங்கிய போதே
நான் விழித்திருக்க வேண்டும்
நிராகரிப்புகளின் வாசலில்
கொஞ்சமாவது நின்று பார்த்திருக்க வேண்டும்.
இல்லை….
இல்லை….

அந்த விழிகளில் சிக்குண்ட மனம் மட்டும்
மீட்கப்படாத கைதியாய் சிக்கியிருக்கிறது..
விலாசம் தொலைத்த கடிதம் போன்று
ஒவ்வொரு வாசலாய் எட்டி எட்டிப் பார்த்து
திரும்பிக் கொண்டே இருக்கிறது..
அதுவரை…
உன் விழிகளின்
உன் கைதியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்!

-       முனியாண்டி ராஜ்.